புதுப்பொலிவுடன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் - ஜனவரி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்.!

புதுப்பொலிவுடன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் - ஜனவரி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்.!
புதுப்பொலிவுடன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் - ஜனவரி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்.!

புத்தம் புது பொலிவுடன் உருவாகி வரும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி மாதம் முதல் மீண்டும் சென்னைக்கு திரும்புகிறது.

இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானமாகவும் மற்றும் இந்திய அணியின் பல சுவராஸ்யமான வெற்றிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம் எப்போதும் தமிழக மக்களிடம் மட்டுமில்லாமல் இந்திய மக்களிடமும் தனித்துவமான ஒரு இடத்தை பெற்றிருக்கிறது. இந்நிலையில் சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம் பற்றி சில சுவாரசியமான தகவல்களை பார்ப்போம்.

சென்னை என்று கூறியவுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நேப்பியர் பாலம், கத்திபாரா என பல நினைவில் வந்தாலும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் நியாபகம் வரக்கூடிய ஒரு இடமாக இருப்பது சேப்பாக்கம் மைதானம் தான். இந்தியாவின் இரண்டாவது பழமையான கிரிக்கெட் மைதானம் என்ற பெருமை எல்லாம் கடந்து இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகள் இங்கு தான் நடைபெற்றுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானதிற்கு பிறகு கடந்த 1916ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் கட்டப்பட்டது. முதலில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் என்ற பெயருடன் செயல்பட்டு வந்த மைதானத்திற்கு முன்னாள் பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த எம்.ஏ.சிதம்பரம் பெயர் சூட்டப்பட்டது.

இந்திய அணி 1932ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வந்தாலும் இந்திய அணிக்கான முதல் டெஸ்ட் வெற்றி என்பது சென்னை எம். ஏ.சிதம்பரம் மைதானத்தில் 1952ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் கிடைத்தது. அதேபோல இந்திய கிரிக்கெட் அரங்கில் மிக முக்கிய தொடராக பார்க்கப்படும் ரஞ்சி கோப்பையின் முதல் போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தான் கடந்த 1934 ஆம் ஆண்டு நடைபெற்றது.

1986ஆம் ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டிராவில் முடிந்த இரண்டாவது போட்டியும் அதுதான்.

இதுமட்டுமில்லாமல் விரேந்தர் சேவாக் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் 319 ரன்கள் குவித்தார். அதன்பிறகு ஒரே போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக இன்று வரை சேவாக் தான் இருந்து வருகிறார்,

மேலும் தற்போதெல்லாம் சென்னை என்றால் அதற்கு மறு பெயராக இருப்பது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தான். சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் 224 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார் தோனி.

இப்படி பல்வேறு வரலாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளும், 22 ஒரு நாள் போட்டிகளும் மற்றும் 2 டி20 போட்டிகளும் நடைபெற்றுள்ளன.

இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த மைதானங்களில் ஒன்றாக இருக்க கூடிய எம்.ஏ.சிதம்பரம் மைதானம் கடந்த 2011ஆம் ஆண்டு 190 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டது. ஆனால் அதில் பிரபலம் வாய்ந்த அண்ணா பெவிலியன் மற்றும் எம்.சி.சி பெவிலியன் இரண்டும் மறு சீரமைக்கப்படாமல் இருந்ததால் தற்போது முழுமையாக இடிக்கப்பட்டு 90 கோடி மதிப்பீட்டில் மீண்டும் புதிய பொலிவுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமசாமி பேசுகையில், டிசம்பர் 15ஆம் தேதிக்கு முன்பாக மைதானத்தின் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். மற்றும் ஜனவரி மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் இங்கு போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் முழுமையான பணிகள் நிறைவடைந்த பின் பார்த்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மைதானங்களை விடவும் அதிக வசதிகள் உள்ள பெவிலியனாக அண்ணா பெவிலியன் மாறும் என்று தெரிவித்த அவர், அண்ணா பெவிலியணில் வீரர்களுக்கான அறை மட்டும் இல்லாமல் தற்போது முதல் தளத்தில் அவர்கள் பயிற்சிகள் மேற்கொள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பெவிலியனோடு சேர்த்து கிரிக்கெட் அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச போட்டிகள் மட்டும் இல்லாமல் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகளும் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறாமல் இருந்ததால், நேரடியாக போட்டிகளை பார்க்க முடியாமல் இருந்த KNOWLEDGABLE CROWD என அழைக்கப்படும் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் மைதானத்திற்கு திரும்பும்போது நவீனம் மற்றும் தமிழக பாரம்பரியங்களை வெளிக்காட்டும் விதமாக அமைக்கப்பட்டு வரும் புதிய ஏற்பாடுகள் மகிழ்ச்சியை தரும் என்றே நம்பலாம்.

-சிவராஜு, சந்தான குமார், வேங்கையன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com