குல்தீப், சாஹல் அசத்தல் - இந்திய அணிக்கு 270 இலக்கு
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 270 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி டர்பனில் நடைப்பெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி குவின் டி காக் - ஆம்லா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆம்லா 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா வந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய டூபிளிசிஸ் நிதானமாக விளையாடினார். இதற்கிடையில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 27 ஓவர்களில் 5விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. டூபிளிசிஸ் மட்டும் போராடி கொண்டிருந்தார். 200 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டு விடும் என எதிர்ப்பார்த்த நிலையில் கிறிஸ் மோரிஸ் அளித்த ஒத்துழைப்பால் அந்த அணி கெளரவமான ஸ்கோரை எட்டியது.
அணி 200 ரன்களை தொட்டபோது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 37 ரன்களுடன் மோரிஸ் நடையை கட்டினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டூபிளிசிஸ் சதமடித்தார். இறுதியில் புவனேஸ்வர்குமார் பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து டூபிளிஸ் அவுட் ஆனார். அவர் 112 பந்துகளில் 120 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹல் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார்.