ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் காயம்: இன்றைய போட்டியில் ஆடுவாரா?
ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் காயம் அடைந்துள்ளதால் நியூசிலாந்துடன் இன்று நடக்கும் பயிற்சி போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான போட்டியில் பங்குபெறும் அணிகள் அங்கு சென்றுள்ளன. அந்த அணிகள் இப்போது பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன. நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை- தென்னாப் பிரிக்கா, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதின. இன்றையை ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் பேட்டிங் பயிற்சி எடுத்த போது காயமடைந்தார். கலீல் அகமது வீசிய பந்து, அவரது வலதுகையை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் அவர் பயிற்சியை விட்டு வெளியேறினார். இதனால் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.