தள்ளிப் போனது சாதனை: காயம் காரணமாக விலகினார் ஸ்டெயின்
காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் தொடரில் இருந்து விலகுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இடம்பெற்றிருந்த தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், 18 ஓவரை வீசும்போது இடது குதிகாலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் பந்துவீச முடியவில்லை. பெவிலியன் திரும்பினார்.
இதுபற்றி தென்னாப்பிரிக்க அணியின் மருத்துவர் முகமது மூசாஜி கூறும்போது, ‘ஸ்டெயின், காயம் காரணமாக விலகியுள்ளார். அவர் காயம் குணமாக இன்னும் நான்கில் இருந்து ஆறு வாரம் வரை ஆகும். அதற்கு பிறகுதான் அவரால் அணிக்குத் திரும்ப முடியும். இதனால் இந்த தொடரில் இனி அவர் பங்கேற்பது சந்தேகம். இது வருத்தமானது’ என்றார்.
காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் அணிக்கு திரும்பியிருந்தார் ஸ்டெயின். இதுவரை 419 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ள ஸ்டெயின் இன்னும் 3 விக்கெட் எடுத்தால், தென்னாப்பிரிக்காவில் அதிக விக்கெட் எடுத்துள்ள ஷான் பொல்லாக் சாதனையை சமன் செய்திருப்பார். இந்தத் தொடரில் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.