இந்தியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் தென்னாப்ரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏ பி டிவில்லியர்ஸ் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான போட்டிகளில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி பேட்ஸ்பேன் டிவில்லியர்ஸ் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் விளையாட மாட்டார் என்ற போதிலும் அவருக்கு மாற்று வீரராக யாரும் அறிவிக்கப்படவில்லை. ஒருநாள் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் அவர் விளையாடும் உடல் தகுதியினை பெற்றுவிடுவார் என தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முன்னதாக நடைப்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் 300 ரன்களை தாண்டவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட டிவில்லியர்ஸ் 2 அரைசதங்கள் அடித்திருந்தார். டிவில்லியர்ஸ் இல்லாதது தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவு தான். இந்திய அணிக்கு இது ஆறுதலான விஷயம். வெளிநாட்டு மண்ணில் ஆடும் இந்திய அணிக்கு டிவில்லியர்ஸ் போன்ற மிரட்டலான பேட்ஸ்மேன் எதிரணியில் இல்லாதது பந்துவீச்சாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும்.

