முதல் டி20 : 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று கொல்காத்தாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்தவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, அந்த அணி இறுதி வரை மீளாமல் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 109 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்துள்ளது. அந்த அணியில் ஆலேன் 27 (20), பவுல் 15 (13), பொலார்ட் 14 (26) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 110 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் 6 (6) மற்றும் தவான் 3 (8) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இதையடுத்து வந்த ராகுல் 16 (22) எடுத்து அவுட் ஆக, ரிஷப் பந்த் 1 (4) ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் மனிஷ் பாண்டே அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்நிலையில் 19 (24) ரன்கள் எடுத்த நிலையில் மனிஷ் பாண்டே அவுட் ஆனார். இருப்பினும் பொறுப்புடன் ஆடிய தினேஷ் கார்த்தி இறுதி வரை விளையாடி 31 (34) ரன்கள் எடுத்தார். அவருடன் விளையாடிய க்ருனல் பாண்ட்யா 15 (13) ரன்கள் எடுத்தார். இவர்களது ஆட்டத்தால் 17.5 ஓவர்களில் 110 ரன்களை எடுத்து இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.