2வது டி20யில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இலங்கை வீரர்களின் பந்துகளை சூறையாடிய ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனையை சமன் செய்தார். அவருடன் அதிரடியாய் விளையாடிய லோகேஷ் ராகுல் 89(49) ரன்கள் எடுத்தார். இதனால் மளமளவென உயர்ந்த இந்திய அணியின் ரன்கள், கடைசி ஓவரில் தொடர் விக்கெட்டுகளால் தடுமாறியது. அத்துடன் 4 ரன்களில் உலக சாதனையையும் தவறவிட்டது. இந்திய அணியில் தோனி 28(21), பாண்டியா 10(3) ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கியுள்ள இலங்கை அணியும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் வேகமாக ரன் குவித்து வந்த திக்வெல்லா 25 ரன்கள் ஆட்டமிழந்தார். இருப்பினும் களத்தில் இருந்த தரங்காவுடன் அடுத்ததாக வந்த குசல் பெராரா இணை சேர மீண்டும் இலங்கையின் ரன்கள் வேகமாக உயரத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் வெற்றி யாருக்கு என்ற சந்தேகம் எழும் நிலை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் இந்திய அணியின் ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதையடுத்து தொடர்ந்து விக்கெட்டுகள் விழ 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 172 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.