இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 260 ரன்கள் குவித்துள்ளது.
மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இதில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து, தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் சாதனையை சமன் செய்தார். பின்னர் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்த நிலையில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் இந்தியாவின் அதிரடியை லோகுஷ் ராகுல் மற்றும் தோனி தொடர்ந்தனர். இதனால் மளமளவென உயர்ந்து இந்திய அணியின் ரன்கள், 250 ரன்களை கடந்து உலக சாதனையை நெருங்கியது. ஆனால் கடைசி ஓவரில் தடுமாறிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களில் உலக சாதனையை தவறவிட்டது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல் 89(49), தோனி 28(21), பாண்டியா 10(3) ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கியுள்ள இலங்கை அணி பிரம்மாண்ட இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.