93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 61, தோனி 39, மணிஷ் பாண்டே 32, ஸ்ரேயாஸ் ஐயர் 24, ரோகித் சர்மா 17, ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இறுதியில் 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் சஹால் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.