பந்துவீச்சால் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய சஹால்!
இந்தியா-இலங்கை முதல் டி20 போட்டியில் முக்கியமான 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே சஹால் மாற்றியுள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா 17, ஸ்ரேயாஸ் ஐயர் 24, கே.எல்.ராகுல் 61, தோனி 39, மணிஷ் பாண்டே 32 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடி வரும் இலங்கை அணி, தொடக்கத்திலேயே திக்வெல்லா விக்கெட்டை இழந்து தடுமாறியது. இருப்பினும் உபுல் தரங்கா, குசல் பெராரா ஆகியோர் நிலைத்து ஆடத்தொடங்கினர். ஆனால் ஆட்டத்தின் போக்கு மாறுவதற்குள் தரங்காவின் விக்கெட்டை வீழ்த்திய சஹால், இலங்கையை மீண்டும் தடுமாறச்செய்தார். அதைத்தொடர்ந்து நிலைத்து ஆடக்கூடிய மெத்தீவ்ஸ் விக்கெட்டையும் எடுத்த சஹால், அடுத்ததாக அசெலா குனரத்னே மற்றும் திசாரா பெராராவின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் அடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 64 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை விளையாடி வருகிறது.

