“கோலி அணியா? தோனி அணியா?” - அனல் பறந்த கால்பந்துப் போட்டி
கோலி தலைமையில் ஒரு அணியும், தோனி தலைமையில் ஒரு அணியும் கால்பந்து விளையாட்டில் மோதிக்கொண்டனர்.
அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று இரவு 8.30 மணியளவில் அயர்லாந்து டப்லின் நகரத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி அயர்லாந்து பயணித்துள்ளது. போட்டிக்காக இன்று மதியம் இந்திய அணியின் வீரர்கள் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியின் போது முதலில் கால்பந்து போட்டி விளையாடி பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் கேப்டன் கோலி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் ஒரு அணியும் பிரிந்து விளையாடினர். அனல் பறக்க நடைபெற்ற இந்தப் போட்டி, சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் மிகவும் வேடிக்கையாக நடைபெற்றது. யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இப்போட்டியில், கோலி தலைமையிலான அணி 4 கோல் அடித்து அபார வெற்றி பெற்றது. தோனி அணி வெறும் ஒரு கோல் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்தப் போட்டியை ஒரு விளையாட்டாகவே எடுத்துக்கொண்டு இரு அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினர்.
இரண்டு அணி வீரர்களும் வெற்றியை கொண்டாடினர். போட்டிக்குப் பிறகு பேசிய தினேஷ் கார்த்திக், “இரண்டு வீரர்களும் விளையாட்டை ஒரு மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்டோம். போட்டி மிகவும் கடினமாகவும், சவாலாகவும் இருந்தது. கால்பந்து போட்டிக்குப் பிறகு அனைவரும் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டோம். பந்துவீச்சாளர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். அயர்லாந்துடனான டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்” என்று கூறினார்.