“என்னது சின்னப் பசங்களா?” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி!

“என்னது சின்னப் பசங்களா?” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி!
“என்னது சின்னப் பசங்களா?” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், இன்னும் மோசமாக இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது. ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சிலும் அஸ்வின் மட்டும் (29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாஸர் ஹுசைன் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், “டெஸ்ட் தரவரிசையில் உலக அளவில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி இன்னும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்தேன். இந்தச் சூழலில் இங்கிலாந்து அணிதான் உலகிலேயே சிறந்தது. ஆனால், இந்தியாவின் தோல்வியை பற்றி குறிப்பிட வேண்டியுள்ளது. இந்திய அணி முற்றிலும் தோல்வி அடைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெறும் போட்டி சிறுவர்களுக்கும், தேர்ந்த இளைஞர்களுக்கும் இடையிலான போட்டியை போல் உள்ளது” என்று விமர்சித்தார்.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இங்கிலாந்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்ற முடிவுடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக முரளி விஜய்க்கு பதிலாக, ஹிகர் தவான் சேர்க்கப்பட்டிருந்தார். அது அணியின் பலத்தை கூட்டியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 10 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தன. இந்திய அணியில் விராட் கோலி 97 (152), ரஹானே 81 (131), தவான் 35 (65) ரன்கள் குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 161 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. 

இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3வது நாளான இன்று இந்திய அணி 450 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் விராட் கோலி 103 (197) ரன்கள் அடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 3 ரன்களில் சதத்தை தவறவிட்ட கோலி, தற்போது சதத்தை அடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இந்திய அணி சிறுவர்கள் அல்ல என்பதையும் இங்கிலாந்து அணிக்கு உணர்த்தியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com