அஸ்வின், இஷாந்த் பந்துவீச்சில் பம்மிய இங்கிலாந்து
3வது நாள் ஆட்டத்தில் 180 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 80 ரன்னும் பேர்ஸ்டோவ் 70 ரன்னும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி 149 (225) ரன்கள் குவித்து, இங்கிலாந்தின் வியூகத்தை உடைத்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி சுருண்டது. இதன்படி, இந்திய அணியை விட இங்கிலாந்து அணி கூடுதலாக 193 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி இப்படி குறைந்த ரன்களில் சுருண்டதற்கு காரணம், இந்திய அணியின் சுழல் நாயகன் அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தான். தொடக்கத்திலேயே அந்த அணிக்கு சுழல் பந்து மூலம் நெருக்கடியை கொடுத்தார் அஸ்வின். அவர் முதல் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அந்த அணி குழப்பத்தில் ஆழ்ந்தது. இதைத்தொடர்ந்து இஷாந்த் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து நிலை குலைந்து போய் உள்ளது.