நாளை 2வது டி20 : சாதனை படைப்பார்களா ரோகித், பும்ரா
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மேக்ஸ்வெல் 46 (24), லின் 37 (20), ஸ்டோய்னிஸ் 33 (19) மற்றும் கேப்டன் ஃபிஞ்ச் 27 (24) ரன்கள் எடுத்தனர். மழையால் ஆட்டம் 17 ஓவர்களோடு நிறுத்தப்பட்டதால், இந்தியாவிற்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஷிகர் தவான் 76 (42), ரிஷப் பண்ட் 20 (16) மற்றும் தினேஷ் கார்த்திக் 30 (13) ரன்கள் எடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆதாம் ஸம்பா தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ரோகித் ஷர்மா 7 (12) ரன்கள் மட்டுமே வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதேபோல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்திருந்தார். இந்த இருவரும் நாளை சர்வதேச் டி20 போட்டியில் சாதனை படைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ரோகித் ஷர்மா 59 ரன்கள் குவித்தால், சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது அதிக ரன்கள் குவித்துள்ள வீரராக 2271 ரன்களுடன் நியூஸிலாந்து வீரர் மார்டின் குப்தில் உள்ளார். இதேபோன்று பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தால் டி20 போட்டிகலில் 50 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அடைவார். தற்போது 52 விக்கெட்டுகளுடன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார்.