தடுமாறும் ஆஸ்திரேலியா : பிரகாசமானது இந்தியாவின் வெற்றி வாய்ப்பு
உலகக் கோப்பை தொடரின் 14வது லீக் போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வருகிறது. லண்டன் கென்னிங்டான் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் ஷிகார் தவான் (117), விராட் கோலி (82), ரோகித் ஷர்மா (57) ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா அணியில் கம்மின்ஸ் 3 விக்கெட் சாய்த்தார்.
இதனைத் தொடர்ந்து 353 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சற்று நிதானமாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் 13ஆவது ஓவரில் பின்ச் ரன் அவுட்டானார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் ஸ்மித் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 133 என இருக்கும் போது வார்னர் 56 (84) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் 200 ரன்கள் வரை ஆஸ்திரேலியா விக்கெட்டை இழக்கவில்லை. ஆஸ்திரேலியா 202 ரன்கள் எடுத்திருந்த போது உஸ்மான் கவாஜா 42 (39) அவுட் ஆகி வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து புவனேஸ்குமார் வீசிய 40 ஓவரில் ஸ்மித் மற்றும் ஸ்டொயினிஸ் அடுத்தடுத்து அவுட் ஆகினார்கள். இதனால் ஆட்டத்தின் போக்கே மாறியது. அடுத்த ஓவரில் சாஹல் வீசிய பந்தில் மேக்ஸ்வெல் நடையைக் கட்டினார். இதனால் வெற்றி வாய்ப்பு இந்திய அணியின் பக்கம் திரும்பியுள்ளது. 41 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 247 ரன்கள் எடுத்துள்ளது.