10 நிமிடங்களில் வீழ்ந்தது கடைசி விக்கெட் - இந்திய அணி அபார வெற்றி
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நாட்டிங்ஹாமில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கேப்டன் கோலி 97 ரன்களும் துணை கேப்டன் ரகானே 81 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முண்ணனி வீரர்கள் சொர்ப்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 39 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
Read Also -> வரலாற்று சாதனையை முறியடித்தது இந்திய அணி
அடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தினார். அதன்பின் 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 23 ரன்கள் எடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.
நான்காவது நாளான நேற்று குக் 9 ரன்களுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஜென்னிங்ஸ் மேலும் ரன் எதுவும் சேர்க்காத நிலையிலும், குக் 17 ரன்களிலும் இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்களிலும், போப் 16 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால், 200 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின் இணைந்த பட்லர், ஸ்டோக்ஸ் இருவரும் ஆட்டத்தில் திருப்பத்தை கொண்டுவந்தனர். மிகவும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடிய இந்த ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்தது.
106 ரன்கள் எடுத்த நிலையில் பட்லரின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். அடுத்து வந்த பெர்ஸ்டோவ்வின் விக்கெட்டுகளையும் பும்ரா எடுக்க இங்கிலாந்து அணியின் நம்பிக்கை மெல்ல குறைய ஆரம்பித்தது. சரிவில் இருந்து மீள்வதற்குள்ளாகவே சிறப்பாக விளையாடி வந்த ஸ்டோக்ஸயும் 62 ரன்களில் வெளியேற்றினார் பாண்ட்யா. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழந்து 311 ரன்கள் சேர்த்தது. ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
மேற்கொண்டு 210 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. போட்டி தொடங்கி 10 நிமிடங்களில் 17 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆண்டர்சன் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் தொடக்க வீரர்கள்கள், மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் என அனைவரும் சொதப்பி வந்தனர். ஆனால், இந்தப் போட்டியில் எல்லோருமே பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். பந்துவீச்சிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இன்னும் முன்னிலையில் உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் அடுத்த இரண்டு போட்டிகளில் அதிக உத்வேகத்துடன் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.