
இங்கிலாந்தில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. தங்களது கனவுகளுக்காக விளையாடிவரும் வீரர்கள் காலியிறுதியை எட்டியுள்ள நிலையில், நாக் அவுட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அந்தவகையில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு காலிறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, கிரீக்ஸ்பூர் மற்றும் பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.
காலியிறுதியின் முதல் செட்டிலேயே ஆட்டம் சூடுபிடித்தது. கடைசி வரை 6-6 என டைபிரேக்கராகவே சென்ற போட்டியில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் விளையாடினர். ஒவ்வொரு பாய்ண்டுக்கும் போராட வேண்டியிருந்த நிலையில் முதல் செட்டை 6-7 என வெற்றிபெற்று கிரீக்ஸ்பூர் மற்றும் பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடி, இந்திய-ஆஸ்திரேலிய இணைக்கு அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில் ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் இணை என்ன செய்யப்போகிறது என்ற எண்ணம் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் இரண்டாவது செட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய போபண்ணா மற்றும் மேத்யூ இணை, 7-5 என வென்று பதிலடி கொடுத்தது. முதலிரண்டு சுற்றுகளின் முடிவுகள் சமனில் முடிந்த நிலையில், வெற்றிக்கான கடைசி செட்டானது விறுவிறுப்பாக மாறியது. ஆனால் மூன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய போபண்ணா-மேத்யூ 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
ஒவ்வொரு டென்னிஸ் வீரருக்கும் விம்பிள்டனில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் போபண்ணாவின் அந்த ஆசை மட்டும் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இது விம்பிள்டனில் அவருக்கு மூன்றாவது அரையிறுதியாகும். 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு 8 வருடங்கள் கழித்து மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஒட்டுமொத்தமாக, 2010 ஆம் ஆண்டில் யுஎஸ் ஓபன் ரன்னர்-அப் ஆக சாம்பியன்ஷிப்பை இழந்த போபண்ணா, ஆண்கள் இரட்டையர் பிரிவில் நான்கு கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய கனவிற்காக 43 வயதில் பெரிய போராட்டத்தை எடுத்துள்ளார் போபண்ணா. எதிர்வரும் அரையிறுதிப்போட்டியில் டச்சு-பிரிட்டிஷ் ஜோடியான வெஸ்லி கூல்ஹோஃப் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கியை எதிர்கொள்ளவிருக்கின்றனர். இந்தமுறையாவது போபண்ணா விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்லவேண்டும் என்பது அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.