சிறுவயதிலேயே 546 ரன்கள் குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்
இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா இன்று தனது 19வது பிறந்த நாள் தினத்தை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாகுக்கு பின்பு தொடக்கத்தில் அசுரத்தனமாக விளையாடக் கூடிய ஆட்டக்காரரை இந்தியா வெகு காலமாகவே தேடிக்கொண்டு இருந்தது. அந்த நீண்ட கேள்விக்கு விடை சொல்லும் விதமாக பிருத்வி ஷா வருகை தந்துள்ளார். இவரை தேசிய அளவில் அடையாளம் காட்டியது 2018 ஐபிஎல் என்று கூறலாம். 2018ஆம் ஐபிஎல் போட்டியில் 18 வயதே நிரம்பிய பிருத்வி அவரது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட பிருத்வி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்டில் சதம் அடித்தார். இவை பிருத்வி ஷா பற்றி சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலானோர் அறிந்த ஒன்றாகும்.
ஆனால் 14 வயது இருக்கும்போதே, பிருத்வி ஷா ஷா சிறுவர்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்தவர். ஹாரிஸ் ஷீல்ட் எனப்படும் சிறுவர்கள் கிரிக்கெட் போட்டியில் 330 பந்துகளில் 546 ரன்கள் குவித்து அப்போதே அனைவரையும் அசர வைத்தவர் இந்த ஷா. இதுவரை சிறுவர்களுக்கான கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனை இவருடையது தான்.
தற்போது பிருத்வி ஷா கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடம் பயிற்சி பெறவுள்ளார். மும்பையில் உள்ள எம்.ஐ.ஜி கிரிக்கெட் கிளப்பில் சச்சின் பிரத்யோகமாக ஷாவிற்கு பயிற்சி அளிக்கவுள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், அதற்கு ஷாவை தயார் படுத்த சச்சின் இப்பயிற்சியை அளிக்கிறார். இதற்கு முன்னரே ஷா சச்சினிடம் பயிற்சி பெற்றவர் தான். தொடர்ந்து சச்சினிடம் பயிற்சி பெறுவதால், அவரது நுணுக்கமான பேட்டிங்கின் சாயலை ஷாவிடம் காணலாம் எனக் கூறப்படுகிறது.