WWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் !
WWE என்கின்ற பொழுதுபோக்கு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் கவிதா தேவி தலால் சாதனைப் படைக்க இருக்கிறார். WWE ஆண்கள் பிரிவில் ராயல் ரம்பள் என்ற போட்டி மிகவுப் பிரபலம். இந்தப் போட்டியை இப்போது வரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ஒரு ரிங்கில் கிட்டத்தட்ட 30 பேர் மோதுவார்கள். அதில் ஒருவரையொருவர் ரிங்கில் இருந்து வெளியே தள்ளிவிட வேண்டும். ரிங்கில் இருந்து வெளியே விழுந்தவர்கள் "அவுட்". இறுதியாக ரிங்கில் யார் நிற்கிறார்களோ அவர்கள் சாம்பியன் பட்டத்துக்காக நடப்பு சாம்பியனோடு மோதுவதற்கான தகுதிப் பெறலாம்.
இப்போது WWE வரலாற்றில் முதல் முறையாக "எவலூஷன்" என்ற பெயரில் பெண்களுக்கு என்ற பிரத்யேக மல்யுத்தப் போட்டி இன்று நடைபெற்றது. அதில் "பேட்டல் ராயல்" என்று 30 பெண் வீராங்கனைகள் பங்கேற்றப் போட்டி நடைபெறுகிறது. அதில்தான் இந்தியாவின் கவிதா தேவி தலால் பங்கேற்கவுள்ளார். இதனை WWE தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது அதில் "ஒரு இந்தியப் பெண் முதல் முறையாக அனைவரையும் வீழ்த்தி தனியாக பேட்டல் ராயல் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறார்" என தகவல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கவிதா தேவியை WWE ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நாளை இந்திய நேரத்தில் ஒளிப்பரப்பாகவுள்ள போட்டியை ஆர்வமாக பார்க்க தயாராகி வருகின்றனர். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர் கவிதா தேவி தலால். அதிலும் பெண் கல்வி மிகவும் குறைவாக இருக்கும் மால்வி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா. ஆனால் இளங்கலை பட்டம் பயின்ற கவிதாவுக்கு, விளையாட்டில்தான் பெரும் ஆர்வம் இருந்தது. மேலும் உடல் பயிற்சியிலும் தீவிரமாக விருப்பம் கொண்டவர். இதனால் பளுதூக்குதலில் பயிற்சிகளை பெற தொடங்கினார் கவிதா.
இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசியப் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கவிதா தங்கப் பதக்கமும் வாங்கினார். 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை WWE போட்டிகளை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து வந்ததால், அதன் மீதும் பெரும் ஆர்வமும் விருப்பமும் இருந்தது கவிதாவுக்கு. இதன் காரணமாகவே தொடர்ந்து சிறு சிறு மல்யுத்த பயிற்சிகளையும் மேற்கொண்டார் கவிதா. இதன் காரணமாகவே எல்லை ராணுவத்தில் காவலராக இருந்த கவிதா, துணை காவல் மேலாளராக பணி உயர்வு கிடைத்த போதும், வேலையை ராஜினாமா செய்தார்.
கிரேட் காளியுடன் பயிற்சி !
கவிதா, மல்யுத்ததை பஞ்சாபை சேர்ந்த மல்யுத்தத்தை ஊக்குவிக்கும் பயிற்சி அகாடமியான தி கிரேட் காளி (தலிப் சிங் ரானா)யில் பயிற்சி எடுத்தார். பின்பு புல் புல் என்கிற பெண் மல்யுத்த வீரருடன் மல்யுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டதையடுத்து இவர் மக்களின் பார்வைக்கு வந்தார். இதனை பார்த்த WWE நிர்வாகத்தினர் கவிதாவை தொடர்புக்கொண்டு தொழில்முறை போட்டியில் முதல் ஸ்டேஜில் பங்கேற்க அழைத்தனர்.
இதனையடுத்து சில தோல்விகள் பல வெற்றிகளும் பெற்று, கவிதா இப்போது மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளார். இந்த வெற்றியையடுத்து கவிதா தேவியை விரைவில் WWE ரா, WWE ஸ்மேக் டவுன் போட்டிகளில் பார்க்கலாம். பல்வேறு கவர்ச்சி உடைகளில்தான் WWE பெண் வீராங்கனைகள் பங்கேற்பார்கள், ஆனால் கவிதா தேவி போட்டிகளில் சுடிதாரில்தான் பங்கேற்கிறார்.