அமெரிக்காவை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது இந்தியா
பெண்கள் ஹாக்கி போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா டோக்கியோ ஒலிம்பிக் 2020-க்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியா - அமெரிக்கா அணிகள் முதல் லெக்கில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் முதல் கால் பகுதி நேரத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேர ஆட்டத்தில் லிலிமா முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 3-வது காலிறுதி நேரத்தில் ஷர்மிளா ஒரு கோலும், குர்ஜித் இரண்டு கோல்களும் அடித்தனர். தொடர்ந்து 4-வது மற்றும் கடைசி காலிறுதி ஆட்டம் தொடங்கியதும் 46-வது நிமிடத்தில் நவ்நீத் கோல் அடிக்க இந்தியா 5-0 என வலுவான நிலையில் முன்னிலைப் பெற்றது. அமெரிக்காவின் மேட்சன் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க இந்தியா 5-1 என வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2-வது லெக் இன்று நடைபெற்றது. அதில், 1-4 என இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. இருந்தாலும் இரண்டு லெக்கையும் சேர்த்து 6-5 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை இந்தியா விழ்த்தியது. இதன்மூலம் இந்தியா டோக்கியோ ஒலிம்பிக் 2020-க்கு தகுதி பெற்றுள்ளது.