இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் VS மித்தாலி ராஜ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் VS மித்தாலி ராஜ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் VS மித்தாலி ராஜ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரமேஷ் பவார். கடந்த 2018இல் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவர் சர்ச்சையால் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்திய அணியின் சீனியர் வீராங்கனை மற்றும் கேப்டன் மித்தாலி ராஜ் உடனான பனிப்போர் தான் அதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ரமேஷ் பவார். 

பயிற்சியாளர் ரமேஷ் பவார் 

மும்பையை சேர்ந்த பவார் இந்திய அணிக்காக 31 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2004 முதல் 2007 வரை சர்வதேச கிரிக்கெட் களத்தில் பவார் விளையாடி உள்ளார். தொடர்ந்து 2015 வாக்கில் அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பவார். பிறகு உள்ளூர் அளவில் பயிற்சியாளராக பவார் பொறுப்பேற்றார். படிப்படியாக முன்னேறி 2018, ஆகஸ்ட் 14 அன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பவார் நியமிக்கப்பட்டார். 

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற 2018 டி20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார் பவார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 2018 டி20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் B-யில் இடம்பெற்ற இந்திய அணி நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

அதில் பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டக் அவுட்டாகி இருந்தார் மித்தாலி ராஜ். இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 25 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு ஆட்டதிலும் அவர் துவக்க ஆட்டக்காரராக களம் கண்டார். 

தொடர்ந்து லீக் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங் ஆர்டரில் மித்தாலி பின்வரிசையில் இறங்கினார். அதோடு அந்த போட்டியில் அவர் பேட் செய்ய களம் இறங்கவில்லை. தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான அதற்கடுத்த போட்டியில் ‘என்னால் முடியும்’ என சொல்லி இன்னிங்ஸை ஓப்பன் செய்தார் மித்தாலி. 

அவர் தொடக்க வீரராக களம் இறங்க பிசிசிஐ-யின் பெரிய தலைகளின் தலையீடு இருந்ததாக சொல்லப்பட்டது. அது மித்தாலியின் பரிந்துரையில் நடந்தகவும் சொல்லப்பட்டது. 

அந்த போட்டியில் 56 ரன்கள். அயர்லாந்து அணியுடனான லீக் போட்டியில் 56 ரன்கள் என அடுத்தடுத்து இரண்டு அரை சதம் பதிவு செய்தார். இருப்பினும் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடனான கடைசி லீக் போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. நான்கு லீக் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற அரையிறுதியில் இங்கிலாந்து அணியை சந்தித்தது. 

அந்த போட்டியில் மித்தாலி விளையாடவில்லை. கடந்த போட்டியில் பெற்ற வெற்றிக் கூட்டணியை தொடர விரும்புவதாக அணியின் முடிவை நியாயப்படுத்தி இருந்தார் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். ஆனால் அந்த நாக்-அவுட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மித்தாலி இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அணியில் அவர் சேர்க்கப்படாதது பலரது புருவங்களை உயர்த்தியது. அதற்கு காரணம் 2018இல் 22 டி20 போட்டிகளில் விளையாடிய மித்தாலி 575 ரன்களை குவித்தார். அதில் 7 அரை சதங்களும் அடங்கும்.  

இதற்கு காரணம் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் என சொல்லப்பட்டது. ஆனால் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பயிற்சியாளர் பவார் மற்றும் தேர்வாளர் சுதா ராய் ஆகியோர் கலந்து பேசியே இந்த முடிவை எடுத்ததாக விளக்கம் கொடுக்கப்பட்டது. 

இந்த சர்ச்சைகளுக்கு பிறகு மித்தாலி 2019 வாக்கில் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மித்தாலியின் தலையீடு தான் ரமேஷ் பவார் பயிற்சியாளர் பதவியிலிருந்து தொடராமல் போனதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இருவருக்குள்ளும் கருத்து முரண் இருந்தது உண்மை தான். அதன் வெளிப்பாடாக பகிரங்கமாக குற்றம் சாட்டிக் கொண்டனர். ஆனால் அவர் நீக்கப்பட அது மட்டும் காரணம் அல்ல.  

“இந்திய கிரிக்கெட் வாரியம் ரமேஷ் பவாரை இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. 2018 நவம்பர் 30 வரை அவர் பொறுப்பை கவனிப்பார்” என பவாரை பயிற்சியாளர் பதவியில் நியமித்த போதே சொல்லி இருந்தார் அப்போதைய செயலாளர் அமிதாப் சவுத்ரி. நவம்பர் 23 அன்று இந்தியா இங்கிலாந்து அணியுடன் அரை இறுதியில் தோல்வியுற்றதால் தொடரிலிருந்து வெளியேறி இருந்தது. 

அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மித்தாலி

“அந்த போட்டியில் நான் விளையாடாதது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருந்தாலும் அது துரதிர்ஷ்டவசமானது. அது ஒவ்வொரு வீரருக்கும் நடக்கும். அணியில் சரியான ஆடும் லெவனை சேர்க்க முயலும் போது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த முடிவை எடுப்பது உண்டு என உணர்கிறேன்” என 2020இல் தொலைக்காட்சி பேட்டியில் மித்தாலி சொல்லியிருந்தார். 

இருவரும் பழைய கசப்புகளை மறந்து இணைந்து பணியாற்றுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் 2022இல் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடருடன் மித்தாலி ஓய்வு பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

- எல்லுச்சாமி கார்த்திக் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com