தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆண்கள், பெண்கள் அணிகள் ஒரே சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதனையடுத்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்ற நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென்னாப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இந்தியா 17.5 ஓவரில் 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வழக்கமாக பேட்டிங்கில் அசத்தும் இந்திய அணி இந்தப்போட்டியில் சொதப்பியது. மந்தனா 37, கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 48, வேதா 23 ரன் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். மித்தாலி ராஜ் டக் அவுட்டானார். தென்னாப்ரிக்க பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில் 3.5 ஓவரில் 30 ரன் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய தென்னாப்ரிக்கா 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து வென்றது. கேப்டன் வான் நியகெர்க் 26, லுவஸ் 41, டு பிரீஸ் 20, டிரையன் 34 ரன் விளாசினர். 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷப்னிம் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்தப்போட்டியில், பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பினால் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக பீல்டிங். வேத கிருஷ்ணமூர்த்தி மிகவும் அற்புதமான கேட்ச் பிடித்தார், ஸ்மிரிதி மந்தனா அற்புதமான பீல்டிங் செய்து சில பவுண்டரிகளை தடுத்தார். இவைகளை தாண்டி இந்திய வீராங்கனை நிறைய கேட்சுகளை விட்டனர். பீல்டிங்கில் சொதப்பி ரன்களை கூடுதலாக எடுக்க வழிவகுத்தனர். ஏனெனில், 133 ரன்களை தென்னாபிரிக்க அணி 19வது ஓவரில் தான் எட்டியது. மேற்கொண்டு கொஞ்சம் நெருக்கடி கொடுத்திருந்தால் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றிருக்கும்.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி செஞ்சூரியனில் நாளை மறுநாள்(பிப். 21) நடக்கிறது. அதனை தொடர்ந்து 5வது மற்றும் இறுதிப் போட்டி பிப்ரவரி 24-ம் தேதி கேப் டவுன் நகரில் நடைபெறவுள்ளது. நாளைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் இந்திய மகளிர் அணி எளிதில் தொடரை வென்றுவிடும். இல்லையெனில் இறுதிப் போட்டி வரை சென்று நெருக்கடியில் விளையாட வேண்டியிருக்கும்.