இங்கிலாந்தில் காலடி வைத்து சவுத்தாம்டனில் 'ஹலோ' சொன்ன இந்திய வீரர்கள்
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றடைந்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு கொரோனா பரவல் தடுப்புக்காக மும்பையில் இருக்கும் ஹோட்டலில் 14 நாள்கள் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அப்போது இந்திய வீரர்களுக்கு 6 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இதனையடுத்து ஜூன் 2 ஆம் தேதி இந்திய வீரர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்கள் நேராக சவுத்தாம்டன் சென்றனர். பின்பு வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பயிற்சி மேற்கொள்வார்கள். இதனையடுத்து இறுதி ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தை நேற்று செலவிட்டனர். ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், உமேஷ் யாதவ், பும்ரா சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இருந்து எடுத்துக்கொண்ட படத்தை வெளியிட்டுள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பின்பு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதனையடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஏறக்குறைய 2 மாதங்கள் இங்கிலாந்தில் இருக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.