‘அப்போது நான் அழுதேன்!' - சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடின நாட்களை நினைவு கூறும் புஜாரா
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அஸ்திவாரம் யார்? என்றால் அது புஜாரா தான். கடந்த டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் பூஜாரா. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட அரை சதம் விளாசி இருந்தார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடினமான நாட்களை நினைவு கூர்ந்துள்ளார் அவர்.
“சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு எனக்கு ஏற்பட்ட முதல் காயம் பெருத்த வருத்தத்தை கொடுத்தது. நான் காயத்திலிருந்து மீள எப்படியும் ஆறு மாதம் ஆகும் என அணியின் பிஸியோ சொல்லிவிட்டார். அதை கேட்டதும் அப்போது நான் அழுதே விட்டேன். என்னால் இனி சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியுமா என்ற சந்தேகம் கூட எனக்கு அப்போது எழுந்திருந்தது.
அப்போது எனக்கு எனது குடும்பம் பக்கபலமாக நின்றது. இருந்தாலும் எனக்கு அப்போது ஏற்பட்ட அழுத்தங்களால் அவர்களிடமே நான் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என சொல்லி விட்டேன். அவர்கள் என்னை நேர்மறையாக சிந்திக்கும்படி சொன்னார்கள். பின்னர் எல்லாம் சரியானது. இப்போது எப்படிப்பட்ட அழுத்தத்தையும் என்னால் கையாள முடியும்” என மைன்ட் மேட்டர்ஸ் என்ற யூடியூப் சேனல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக களம் காண உள்ளார் புஜாரா. இங்கிலாந்து மண்ணில் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். ஆங்கில மண்ணில் அவரது பேட்டிங் சராசரி 29.41. மொத்தம் 500 ரன்கள் எடுத்துள்ளார். அங்கு அவரது அதிகபட்ச ரன்கள் 132. இரண்டு அரை சதங்களும் பதிவு செய்துள்ளார். இது தவிர கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் அவருக்கு உள்ளது.