ஓய்வை உறுதிசெய்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா - இதுதான் காரணமாம்!

ஓய்வை உறுதிசெய்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா - இதுதான் காரணமாம்!
ஓய்வை உறுதிசெய்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா - இதுதான் காரணமாம்!

வருகிற பிப்ரவரி மாதத்துடன் டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வுப் பெறுவதாக பிரபல இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் 3, கலப்பு இரட்டையர் பிரிவில் 3 என 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற 36 வயதான சானியா மிர்சா, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்றப் பெருமையையும் கொண்டவர். மேலும் இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். அத்துடன் 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றவர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து, கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சாவுக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற 4 வயது மகன் உள்ளார். இந்த நிலையில், கணவர் சோயிப் மாலிக்கிற்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த மாடலான ஆயிஷா ஓமருடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் சோயிப் மாலிக் - சானியா மிர்சா தம்பதி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து வாழ்வதாகவும் ஒருபக்கம் செய்திகள் பரவினாலும், கருத்து எதுவும் தெரிவிக்காமல் டென்னிஸ் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார் சானியா மிர்சா.

இதற்கிடையில், டென்னிஸ் போட்டிக்கு செல்லும்போதெல்லாம் தனது மகனையும் உடன் அழைத்துக் கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வயதாவதால் உடல் சோர்வடைந்து, காயம் குணமாகுவதில் தாமதம் ஆயவற்றை குறித்து ஓப்பனாக பேசிய சானியா மிர்சா, கடந்த 2022-ம் ஆண்டுடன் ஓய்வுபெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால் முழங்கை காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யு.எஸ். ஓபனை தவறவிட்டார். இதனால் அவரது ஓய்வு தாமதமானது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி துபாயில் துவங்கும் டபிள்யூ.டி.ஏ. 1000 ( WTA 1000) டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருடன் டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார். மகளிர் டென்னிஸ் சங்கத்திற்கு அவர் அளித்துள்ளப் பேட்டியில், “டபிள்யூ.டி.ஏ. தொடரின் இறுதிப் போட்டியுடன் வெளியேற விரும்புகிறேன். யு.எஸ். ஓபனுக்கு முன்பே என் முழங்கையில் தசைநார் கிழிந்தது. அதனால், எல்லாவற்றிலிருந்தும் நான் வெளியேற வேண்டியிருந்தது.

காயத்திலிருந்து இப்படியே ஓய்வுபெற விரும்பவில்லை. அதனால் தற்போது பயிற்சி பெற்று வருகிறேன். டபிள்யூ.டி.ஏ. தொடர் தான் எனது கடைசிப் போட்டியாக இருக்கும். உண்மையில் எனது மனதில் பலம் இல்லை. எனது முன்னுரிமைகள் மாறியுள்ளன. உடலும் ஓத்துழைப்பதில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு சானியா மிர்சா துபாயில் உள்ள தனது டென்னிஸ் அகாடெமியை கவனித்துக்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் மெல்போர்னில் வரும் 15-ம் தேதி தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் கஜகஸ்தானின் அன்னா டானிலினா இணைந்து சானியா மிர்சா களம் இறங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் போட்டியில் சானியா மிர்சா பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com