“வரலாற்றை மாற்றி அங்கும் இந்தியாவின் வெற்றிக் கொடி பறக்கும்”-சுனில் கவாஸ்கர்
"இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் 15-ஆம் தேதி டெஸ்ட் போட்டியில் மோத உள்ள காபா மைதானம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கோட்டையாக இருக்கலாம். ஆனால் அங்கும் இந்திய அணியின் வெற்றிக்கொடி பறக்கும். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை இந்திய அணி 131 ஓவர்கள் விளையாடி டிரா செய்தது. அந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆட்டத்தை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் கவாஸ்கர் இதை தெரிவித்துள்ளார்.
“காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்த முடியாத அணியாக இருக்கலாம். ஆனால் அந்த வரலாற்றை இந்திய அணி மாற்றி அமைக்கும். ரஹானே தலைமையிலான இந்திய அணியால் அதை செய்யவும் முடியும். இந்தியா இந்த தொடரை வென்றால் அது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமையும்” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1988 முதலே இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது. காபா மைதானத்தில் இந்த தொடரின் கடைசி போட்டி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.