களமிறங்கும் ராகுல் திரிபாதி - இலங்கைக்கு எதிரான டி20யில் பந்துவீசும் இந்தியா
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்காக டி 20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல், டி 20 அணியில் இளைஞர் படையும், ஒருநாள் அணியில் சீனியர் படையும் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே இவ்விரு அணிகளுக்கு இடையேயான மும்பையில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணியில் தீபக் ஹூடா (41 ரன்கள்), இஷான் கிஷன் (37 ரன்கள்), அக்ஷர் படேல் (31 ரன்கள்) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர். அதுபோல் பந்துவீச்சில் ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், ஹர்சல் படேல் ஆகியோர் நம்பிக்கை அளித்தனர்.
இந்த நிலையில் புனேவில் இன்று (ஜனவரி 5) நடைபெற இருக்கும் 2வது போட்டியில் இந்திய அணி டாஸ் ஜெயித்துள்ளது. என்றாலும், முதலில் இலங்கை அணியே பேட் செய்ய இருக்கிறது.
இதையடுத்து இன்றைய போட்டியில் இஷான் கிஷன், சுப்மான் கில் தொடக்க பேட்டர்களாகக் களமிறங்க உள்ளனர். இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி, சாஹல், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இன்றைய போட்டியில் இன்னொரு மாற்றமாக ராகுல் திரிபாதி இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியிருக்கும் சஞ்சு சாம்சனுக்குப் பதில் இளம் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டாலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.