ஆஸ்திரேலிய கேப்டனை வீழ்த்திய இந்திய சப்ஸ்டிடியூட் பவுலர் சாஹல்!
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் தொடரை இந்தியா இழந்த நிலையில் டி20 தொடரை வெல்வதற்கான வாய்ப்பாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்சின் விக்கெட்டை வீழ்த்திய பந்தை வீசியது இந்தியாவுக்காக மாற்று வீரராக களம் இறங்கிய சாஹல் தான்.
காயம்பட்ட ஜடேஜாவுக்கு மாற்றாக இந்த ஆட்டத்தில் மாற்று வீரராக (Concussion Substitute) சாஹல் களம் இறங்கியதும் குறிப்பிடத்தக்கது.
சப்ஸ்டிடியூட்டாக களம் இறங்கி விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் சாஹல்.
இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார் சாஹல். இதில் 7 டாட் பால்களும் அடங்கும்.
2019 இல் ஐசிசி கொண்டு வந்த மாற்றத்தின்படி காயம்பட்ட வீரருக்கு மாற்றாக ‘LIKE FOR LIKE REPLACEMENT’ ஆக அந்த வீரருக்கு இணையான மற்றொரு வீரரை போட்டியின் ரெஃப்ரி அனுமதித்தால் ஆடும் லெவனில் சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது. அதை பயன்படுத்தி இறுதி ஓவரில் ஹெல்மெட்டில் பந்து தாக்கப்பட்ட ஜடேஜாவுக்கு மாற்றாக சாஹல் களம் இறங்குகிறார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த விஷயத்தை அறிந்ததும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் சினம் கொண்ட சிங்கமாக மேட்ச் ரெஃப்ரி டேவிட் பூனிடம் வாக்குவாதம் செய்தார். இருப்பினும் சாஹல் களம் இறங்கி விளையாடியதோடு ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.