“டிவில்லியர்ஸ் சொன்னதை அப்படியே செய்தேன்” - விராட் கோலி ஓபன் டாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் மூன்று முறை ரன் எதுவும் சேர்க்காமல் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பியிருந்தார். அதையடுத்து அவரது பேட்டிங் பார்ம் குறித்து கேள்வி எழுப்ப பட்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அரைசதம் கடந்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது ஆட்டம் இந்திய அணி வெற்றி பெறவும் உதவியது.
போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலி “அடிப்படையிலிருந்து நான் எனது போக்கஸை ஷிப்ட் செய்ய வேண்டியிருந்தது. அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுபவன் நான். பந்தை கூர்ந்து கவனித்து ஆடினேன். அணி நிர்வாகம் என்னிடம் சில விஷயங்கள் குறித்து பேசியிருந்தது. அனுஷ்காவும் சிலவற்றை சொல்லியிருந்தார். அது தவிர இந்த ஆட்டத்திற்கு முன்னதாக ஏபி டிவில்லியர்ஸிடமும் நான் பேசியிருந்தேன், ‘பந்தை வாட்ச் பண்ணு’ என அவர் சொன்னார். அதை செய்தேன்” என தெரிவித்தார்.
டெத் ஓவர்களில் இந்தியா அபாரமாக பந்து வீசியிருந்ததையும் கோலி குறிப்பிட்டார். அறிமுக வீரர் இஷான் கிஷனின் மெர்சலான ஆட்டத்தையும் கோலி புகழந்திருந்தார். முன்னதாக, 49 பந்துகளில் 73 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி20 போட்டிகளில் முதல் வீரராக 3000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.