அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த கேப்டன் - தோனியின் சாதனையை முறியடித்த கோலி
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்றிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான வார்னர் 3 ரன்களிலும், கேப்டன் ஃபின்ச் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித், லாபு ஷேன் கூட்டணி சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்தது. அரைசதம் கடந்த லாபுஷேன் 54 ரன்களில் ஆட்டமிழக்க, எதிர்பாராத இடத்தில் களமிறக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 9 ஆவது சதத்தை பூர்த்தி செய்து, 131 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ராகுல் இணை 69 ரன்களைச் சேர்த்தது. ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, ரோகித் இணை ஆஸ்திரேலிய வீரர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். அதிரடியான ஆட்டத்தால் 6 சிக்ஸர்கள் உட்பட 119 ரன்களை குவித்தார் ரோகித் சர்மா.
சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்த கோலி 89 ரன்களில் ஆட்டமிழந்தார். இளம் வீரர் ஸ்ரேயஸ் அய்யர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 ரன்களைச் சேர்க்க, 47.3 ஓவர்களிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சதமடித்த ரோகித் சர்மாவிற்கு ஆட்ட நாயகன் விருதும், கேப்டன் விராட் கோலிக்கு தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த தொடரில், மூன்று போட்டிகளில் முறையே 16, 78, 89 ரன்கள் என மொத்தமாக 183 குவித்தார் விராட் கோலி. மேலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற பெருமையை இந்தத் தொடரில் அவர் பெற்றுள்ளார். கேப்டனாக களம் கண்ட 82 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை கடந்து கோலி அசத்தியிருக்கிறார். இந்திய முன்னாள் கேப்டன் தோனி, கேப்டனாக 127 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை கடந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.
விராட் கோலி பெற்றுள்ள 18 ஆவது தொடர் நாயகன் விருது இது. 20 தொடர் நாயகன் விருதினை பெற்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது முறையாக கோலி தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அதிகபட்சமாக தலா 4 முறை தொடர் நாயகன் விருதினை பெற்றுள்ளார்.
நேற்றையப் போட்டியில், விராட் கோலி தன்னுடைய 57 ஆவது அரைசதத்தை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அடித்தார். அதேபோல், அவர் இதுவரை 43 சதங்களையும் விளாசியுள்ளார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் நூறு முறை 50 ரன்களுக்கு மேல் குவித்தவர் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 145 முறை ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.