ஐபிஎல் தொடர்: எந்த அணியில் எந்தெந்த வீரர்கள் நீடிக்கிறார்கள்?
11வது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்க உள்ள வீரர்கள் பெயரை ஜனவரி 4-ல் அறிவிக்க உள்ளது.
11-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் போட்டியில் இடம் பெறவுள்ளன. ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இம்முறை ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக செலவிடும் ஒட்டுமொத்த தொகை ரூ.66 கோடியில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் பழைய வீரர்களில் 5 பேரை தக்கவைத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்ளும் 3 வீரர்களை பெயர்களை ஜனவரி 4-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். சென்னை அணியைப் பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜாவை தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோல், மும்பையில் ரோகித் சர்மா மற்றும் பாண்ட்யா சகோதரர்கள் நீடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. விராட் கோலியும் பெங்களூரு அணியில் இருப்பார். ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் நாளில் மேலும் அந்த அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

