விபத்தை சாதனை திருப்பமாக மாற்றிய ‘மானசி ஜோஷி’ : பாரா பேட்மிண்டன் வீராங்கனையின் கதை

விபத்தை சாதனை திருப்பமாக மாற்றிய ‘மானசி ஜோஷி’ : பாரா பேட்மிண்டன் வீராங்கனையின் கதை

விபத்தை சாதனை திருப்பமாக மாற்றிய ‘மானசி ஜோஷி’ : பாரா பேட்மிண்டன் வீராங்கனையின் கதை

டிசம்பர் 2, 2011 : மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் பரந்து கொண்டிருந்த அந்த இளம் பெண்ணுக்கு எதிர்புறம் வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக தடுப்புக் கட்டைகளை உடைத்து கொண்டு அவள் மீது மோதியது. அந்த விபத்தில் அவளது இடது கால் நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடலியக்கத்திற்கு தேவையான உதிரம் மொத்தமும் சிந்திய நிலையில், உயிருக்காக போராடி கொண்டிருந்த அவளை மருத்துவ சிகிச்சை மூலம் அவளது உயிரை மட்டும் காத்துள்ளனர் மருத்துவர்கள். 

இடது கால் முழுவதிலும் நோய் தொற்று ஏற்பட்டிருந்ததால் அறுவை சிகிச்சையின் துணையோடு இடது காலினை முழுவதுமாக நீக்கியுள்ளனர் மருத்துவர்கள். இரண்டு மூன்று நாட்களுக்கு பின்னர் மயக்கத்திலிருந்து மீண்ட அவருக்கு விபத்தினால் ஏற்பட்ட காயங்கள் கொடுத்த வலியை காட்டிலும் இடது கால் இல்லை என்ற மன வேதனை கொடுத்த வலி அதிகம். 

‘செயற்கை முறையில் PROSTHETIC கால்களை பொறுத்தலாம்’ என மருத்துவர்கள் அவளுக்கு கொடுத்த தெம்பில் செயற்கை காலினை பொறுத்திக் கொண்டு 45 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து நடை பழகி வீடு திரும்பிய அவளுக்கு தன் (மாற்றுத்)திறனை கொண்டு தாய்நாட்டிற்காக ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற கனவு கண்முன்னே வந்து சென்றுள்ளது. இப்போது அவளது கனவு பலித்துள்ளது. 

தேசம், சர்வதேசம் என பாரா பேட்மிண்டன் தொடர்களில் பல பதக்கங்களை குவித்ததோடு 2019 ஸ்விட்சார்லாந்தில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனையான மானசி ஜோஷி (31 வயது) தான் அந்த பெண். 

மும்பையில் பிறந்து, படித்து வளர்ந்த மானசி ஜோஷிக்கு அவரது ஆறாவது வயதில் பேட்மிண்டனை அறிமுகம் செய்து வைத்தது அவரது தந்தை தான். அப்போது பேட்மிண்டனை மானசி பொழுதுபோக்குக்காக மட்டுமே ஆடி வந்துள்ளார். பள்ளி, வட்டம், மாவட்டம் என பேட்மிண்டனில் மானசி கற்ற மொத்த வித்தைகளையும் இறக்கி பதக்கங்களை வென்றுள்ளார். இருப்பினும் ஏனோ சில பல காரணங்களை பள்ளி படிப்பை முடித்த கையேடு பேட்மிண்டன் ராக்கெட்டுக்கும் ஒய்வு கொடுத்து விட்டு இன்ஜினியரிங் படிக்க சென்றுள்ளார். எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்கில் பட்டம் முடித்த கையேடு மும்பை நகரின் அரபிக் கடலோரத்தில் அமைந்திருந்த ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். 

ஒன்னரை ஆண்டு காலம் வேலையில் படு பிசியாக இருந்த மானசியின் மொத்த வாழ்க்கையையும் அந்த விபத்து திருப்பிப்போட வேலையை துறந்து விட்டு அடுத்த வேலைக்கான பயோ டேட்டாவை தயாரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினாலும், தூண்டுதலினாலும் ஒரு காலை இழந்த நிலையில் தமிழ் பட ஹீரோக்கள் போல மீண்டும் பேட்மிண்டன் ராக்கெட்டை கையில் எடுத்து கொண்டு பேட்மிண்டன் கோர்ட்டிற்குள் எண்ட்ரியாகியள்ளார். இந்தமுறை மாற்றுத்திறனாளி வீராங்கனையாக மானசி களம் இறங்கியிருந்தாலும் அவர் பயிற்சி செய்து வந்த அகாடமியிலிருந்த மற்ற வீரர்களை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அந்த வெற்றி அவருக்குள் இருந்த வலிகளுக்கு ஆறுதல் கொடுக்க தொடர்ச்சியாக பேட்மிண்டன் ஆடுவதை வாடிக்கையாக்கி கொண்டார். 

‘நீ நன்றாக விளையாடுகிறாய், உன்னிடம் உள்ள திறனை வீண் செய்து விடாதே’ என மானசியின் நண்பர்கள் மீண்டும் ஊக்கம் கொடுக்க பிஸியோதெரபி மருத்துவர்களின் ஆலோசனையோடு தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார் மானசி. அதன் மூலம் 2014ல் தேசிய அளவிலான பாரா பேட்மிண்டன் தொடரில் அசத்த அதே ஆண்டில் லண்டன் நகரில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் வீரர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் மானசி.

அதுவரை ஸ்பான்சர்ஷிப்பே இல்லாமல் நண்பர்கள் மற்றும் தனது சம்பாத்தியத்தை கொண்டு பேட்மிண்டன் விளையாட்டுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவது, ஆட்டங்கள் ஆட வெளியூர்களுக்கு செல்வது மாதிரியான செலவுகளை கவனித்து வந்துள்ளார். சர்வதேச பாரா பேட்மிண்டன் தொடர்களில் வெற்றி கிடைத்த பிறகு அனைத்து தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் ‘நீயா நானா’ என போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஸ்பான்சரை அள்ளி வழங்க ஆரம்பித்தனர். இருப்பினும் அரசு நிதியுதவி அளிக்காததால் தனியார் வங்கி ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து கொண்டே பாரா பேட்மிண்டனிலும் அசத்தி வந்திருக்கிறார் மானசி.

கடந்த 2015 துவங்கி இன்று வரை தங்கம், வெள்ளி, வெண்கலம் என சர்வதேச பாரா பேட்மிண்டனில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் மாதிரியான ஆட்டங்களில் (லண்டன், ஸ்பெயின், தாய்லாந்து, ஸ்விட்சர்லாந்து மாதிரியான நாடுகளில்) பதக்கங்களை வென்றுள்ளார். பேட்மிண்டன் ஜாம்பவான்களை உருவாக்கி வரும் கோபிச்சந் பேட்மிண்டன் அகாடமியில் மானசி பயிற்சியும் பெற்றுள்ளார். 

“மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களும் வளர்ந்து வரும் குழந்தைகளின் நம்பிக்கை நட்சத்திரமாக (ரோல் மாடல்) இருக்க முடியுமென்பது எனது நம்பிக்கை. ஏனென்றால் நாங்கள் எங்களோடும், களத்தில் சக போட்டியாளர்களோடும் போட்டியிட்டு எங்களை திறமையை நிரூபித்து வருகிறோம்” என்கிறார் அவர். 

கடந்த 2020இல் அடுத்த தலைமுறைக்கான தலைவர்கள் பட்டியலில் டைம் இதழின் ஆசிய அட்டை படத்திலும் அவர் இடம்பிடித்திருந்தார். 

-எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com