கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் தன்னுடைய பயிற்சியை இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் இப்போது பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீர்ரகள் பலரும் இந்த பொது முடக்க காலக்கட்டத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். பலரும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக வீட்டில் இருந்தபடியே உரையாற்றி வருகின்றனர். பல கிரிக்கெட் வீரர்கள் இன்னும் வலைப்பயிற்சியை கூட தொடங்கவில்லை. விராட் கோலி போன்றோர் வீட்டு வளாகத்திலியே டைம் பாஸுக்காக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்கு வந்து பயிற்சியை மேற்கொள்வதற்கான உத்தரவை பிசிசிஐ இன்னும் பிறப்பிக்கவில்லை.
இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, இன்ஸ்டாகிராமில் தான் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவில் "நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள தனிமனித இடைவெளியுடன் கூடிய பயிற்சி அவசியமாகிறது" என தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கியப் பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.