வேகப்பந்து வீச்சால் கங்குலியை மெர்சலாக்கிய முகமது ஷமியின் பிறந்தநாள் இன்று..!
பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்கள் என்றாலே அவர்கள் வீசும் பந்தை போலவே அவர்களும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். ஆனால் அதுமாதிரியான ஆர்பரிப்பு எதுவும் இல்லாமல் சாந்தமாக பந்து வீசி அசத்துபவர் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. அவருக்கு இன்று பிறந்த நாள்.
1990-இல் உத்தர பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். அவரது அப்பா விவசாயி. வேகப்பந்து வீச்சாளரும் கூட. அந்த சமயத்தில் இந்தியாவில் வளர்ந்த சிறு பிள்ளைகளுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை இஷ்டம். ஷமிக்கும் அப்படித்தான். கல்லி கிரிக்கெட்டில் கில்லியாக செயல்பட்ட ஷமியின் பந்துவீச்சை பார்த்து மிரண்டுபோன அவரது அப்பாதான், புரொபெஷனல் கிரிக்கெட்டிற்கு ஷமியை அழைத்துச் சென்று சித்திக் என்ற பயிற்சியாளரிடம் சேர்த்துள்ளார்.
‘அவரை முதன்முதலில் நான் வலைப்பயிற்சியில் பார்த்தபோதே அவர் அபார திறன் படைத்த பந்து வீச்சாளர் என முடிவு செய்து விட்டேன்’ என்று ஒரு போட்டியில் ஷமியின் முதல் கோச் சித்திக் தெரிவித்துள்ளார்.
அப்படியே தன் திறமை மூலம் மேற்கு வங்கத்திற்கு யணித்தார் ஷமி. அங்கு பயிற்சி செய்தவர் கிரிக்கெட்டின் தாதாவான கங்குலிக்கு வலை பயிற்சியில் பந்து வீசியுள்ளார்.
‘இந்த பையன கொஞ்சம் ஸ்பெஷலா கவனிங்க’ என பயிற்சியாளரிடம் ஷமிக்காக பரிந்துரைத்துள்ளார் கங்குலி.
பின்னர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியவர் அதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்து கடந்த 2013 இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். முதல் போட்டியிலேயே நான்கு ஓவர் மெய்டன் வீசியிருந்தார் ஷமி.
மணிக்கு 140 முதல் 145 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ஷமி கடந்த 2019 ஜனவரியில் இந்தியாவுக்காக அதிவேகமாக நூறு விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டையும் எடுத்துள்ளார்.
ரிவர்ஸ் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட்டான ஷமி இதுவரை 77 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல 49 டெஸ்ட் போட்டிகளில் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அடுத்த சில நாட்களில் ஆரம்பமாக உள்ள ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஷமி விளையாட உள்ளார்.
ஹேப்பி பர்த் டே ஷமி...