“மாமா.. அட உங்களத்தான் மாமா” - மாலிக்கை அழைத்த இந்திய ரசிகர்கள்
இந்திய டென்னிஸ் வீராங்கனையின் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சொயப் மாலிக்கை இந்திய ரசிகர்கள் ‘மாமா’ என்று உரிமையுடன் அழைத்துள்ளனர்.
ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில் 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய இரு அணிகள் வெளியேறிவிட்டன. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 4 சுற்றின், நேற்றைய போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் 237 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சொயப் மாலிக் 78 (90), சர்ஃப்ராஸ் 44 (66), ஃபாகர் 31 (44), ஆசிஃப் அலி 30 (21) ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்த களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டை இழக்காமல் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. நிலைத்து விளையாடிய கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் இருவருமே சதம் அடித்தனர். அணியின் ரன்கள் 210 இருக்கும்போது, 114 (100) ரன்கள் எடுத்திருந்த தவான் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து ஆட்டத்தின் இறுதி வரை ரோகித் ஷர்மா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் பேட்டிங் செய்து வெற்றியை பறித்தனர். ரோகித் 111 (119) மற்றும் ராயுடு 12 (18) ரன்கள் எடுத்தனர்.
இதற்கிடையே இந்திய அணி பேட்டிங் செய்த போது, சொயப் மாலிக் பவுண்டரியின் அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அரங்கத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பலர், சொயப் மாலிக்கை ‘ஜிஜூ’ என்ற உறவுமுறையை குறிப்பிட்டு (அக்காவின் கணவர்) உரிமையுடன் அழைத்தனர். அதாவது, “மாமா.. அட உங்களத்தான் மாமா. அக்கா செளக்கியமா” என்றனர். இதற்கு சொயப் மாலிக்கும் திரும்பி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.