பாகிஸ்தான் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர் !
உலகக் கோப்பை, இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது இந்தியா இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 140 ரன்கள் விளாசினார். பின்னர், 337 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 160 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்தது.
மழைகுறுக்கிடவே 40 ஓவர்களில் 302 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணி 89 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை தொடரில் 7வது முறையாக வெற்றியை ருசித்தது.
இந்த போட்டியின் போது மைதானத்தில் இரு நாட்டு வீரர்களும் மோதிய நிலையில், அரங்கில் இருந்த இளைஞர் ஒருவர், பெண் ஒருவரிடம் காதலை வெளிப்படுத்தினார். இந்திய அணியின் சீருடை அணிந்த அந்த இளைஞர், அந்த பெண்ணிடம் மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கினார். இதை அந்த பெண் ஏற்றுக் கொண்ட நிலையில், இருவரும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பு ஆர தழுவி, முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிகொண்டனர்.
இதை கண்ட ரசிகர்கள் அனைவரும் சத்தமிட்டு, அத்தம்பதியை உற்சாகப்படுத்தினர். காதலை வெளிப்படுத்திய வீடியோ அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவராலும், வேகமாக பகிரப்பட்டு வருகிறது.