இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம்: 100% சம்பள உயர்வு!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான சம்பளம் நூறு சதவிகிதம் அதிகரிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில், வீரர்களுக்கு மூன்று பிரிவாக சம்பளம் வழங்கப்படுகிறது. ‘ஏ’ பிரிவு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடியும், ‘பி’ பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், ‘சி’ பிரிவினருக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.
இந் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் அதிகரிப்பதால் அதற்கு இணையாக வீரர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் வலியுறுத்தினர். பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, ‘ஏ’ கிரேடு வீரர்களுக்குரிய சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, தோனி, ரவி சாஸ்திரி ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயை சந்தித்து சம்பளம் விவகாரம் குறித்து பேச்சு நடத்தினர். அவர்கள் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் நூறு சதவிகிதம் உயர்கிறது.
2017-ல் 46 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, ரூ. 5.51 கோடி சம்பளம் பெற்றுள்ளார். புதிய திட்டத்தின் படி, அவருக்கு ரூ. 10 கோடிக்கு மேல் வழங்கப்படும். ஐபிஎல், விளம்பரம், ரஞ்சி என விளையாடி வரும் கோலிக்கு, ஆண்டுக்கு ரூ.12 முதல் 15 கோடி சம்பளம் வருகிறது. இனி ரூ.30 கோடியாக அதிகரிக்கும் என தெரிகிறது.
‘சீனியர் வீரர்களுக்கு 100 சதவிகித உயர்வு இருக்கும். உள்ளூர் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கும் அதே அளவு உயர்வு இருக்கும்’ என்று சம்பள உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க உச்சநீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகிகளின் கமிட்டியை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.