வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா உறுதி - தென்னாப்ரிக்க ஒருநாள் தொடரில் விளையாடுவதில் சிக்கல்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரும், இடது கை பேட்ஸ்மேனுமான வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது அந்த தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த தொடர் வரும் 19-ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.
காயம் காரணமாக சுமார் 10 மாதங்களாக அவர் சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து விலகி இருந்தார். அண்மையில் காயத்திலிருந்து மீண்ட அவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார். அதன் பலனாக அவர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணிக்காக 31 டி20, 4 டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் அவர் விளையாடி உள்ளார். 42 ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.

