‘உள்ள வந்தா பவருடி.. அண்ணன் யாரு? தளபதி’ - நனவானது வருண் சக்ரவர்த்தி கனவு!

‘உள்ள வந்தா பவருடி.. அண்ணன் யாரு? தளபதி’ - நனவானது வருண் சக்ரவர்த்தி கனவு!
‘உள்ள வந்தா பவருடி.. அண்ணன் யாரு? தளபதி’ - நனவானது வருண் சக்ரவர்த்தி கனவு!

அமீரகத்தில் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முத்திரை பதித்து அசத்தினார் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்ச்சாளர் வருண் சக்ரவர்த்தி. அதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் வருணின் மாயாஜால சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்திருந்தனர்.  

கிரிக்கெட் மீது தீரா காதல் கொண்ட வருண் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் என்பது ஐபிஎல் தொடரின் போது அவரது உடலில் இருந்த ஒரு டாட்டூ மூலமாக தெரியவந்தது. ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பகிர்ந்த வீரர்களின் பயிற்சி தொடர்பான ட்வீட்டில் வருணின் இடது கையில் நடிகர் விஜயின் டாட்டூ இருந்ததை அடையாளம் கண்டனர் விஜய் ரசிகர்கள். 

இடது கையை தூக்கியபடி திரும்பி பார்க்கும் ‘தலைவா’ படத்தின் டிரேட் மார்க் போஸை வருண் தனது கையில் டாட்டூ குத்தியிருந்தார். அதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்திருந்தனர். 

இருப்பினும் இது தொடர்பாக வருண் எதுவுமே சொல்லாமல் இருந்த நிலையில் நடிகர் விஜயை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘உள்ள வந்தா பவருடி.. அண்ணன் யாரு? தளபதி’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். விஜய்யின் அடையாறு இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடர் நடந்து கொண்டு கொண்டு இருக்கும் போதே நடிகரும் கிரிக்கெட் விமர்சகருமான பாஸ்கி உடன் நடந்த வீடியோ உரையாடல் ஒன்றில் பேசிய வருண் சக்ரவர்த்தி, ‘தளபதியை பார்க்க வேண்டும் என வெறியா இருக்கேன் சார். சந்திக்க வாய்ப்பு ஏதாவது கிடைச்சா சொல்லுங்க’ என்று கூறியிருந்தார். தற்போது வருண் சக்ரவர்த்தியின் கனவு நனவாகியுள்ளது.

வருண் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி 13 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதன் மூலம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 

“இந்திய அணிக்காக விளையாட என்னை அழைத்திருப்பது எனக்கு பெரிதினும் பெரிய விஷயம். அணியில் நான் இடம்பிடிப்பேன் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நிச்சயமாக எனது சிறப்பான ஆட்டத்தை கொடுப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து அணியில் என்ன தேர்வு செய்ததற்காக தேர்வு குழுவினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி” என வருண் தெரிவித்திருந்தார். 

முதல்முறையாக இந்திய ஜெர்ஸியில் அறிமுக வீரராக களம் இறங்க ஆவலோடு இருந்த அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் சங்கடத்தை கொடுக்க ஆஸ்திரேலிய தொடரிலிருந்து அவர் விலக்கி கொல்லப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.

அவருக்கு மாற்றாக ஹைதராபாத் அணிக்காக விளையாடிய மற்றொரு தமிழக வீரரான ‘யார்க்கர்’ நடராஜன் அணியில் இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடிய போதே வருண் காயம் அடைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com