அறிமுக டெஸ்ட் போட்டியிலே 85 பந்துகளில் அதிரடி சதம் - ஷிகர் தவனின் சாதனைகள் ஒரு பார்வை
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான தொடக்க வீரரான ஷிகர் தவனுக்கு இன்று பிறந்த நாள். இதே நாளில் கடந்த 1985இல் டெல்லியில் பிறந்தவர் அவர். 12 வயதில் தொழில்முறை கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினார். ஆரம்பத்தில் விக்கெட் கீப்பராக தனது கெரியரை தொடங்கியவர் பின்னாளில் சர்வதேச அணியின் பவுலர்களை பவுண்டரிகளால் புரட்டி எடுக்கும் மகத்தான பேட்ஸ்மேனாக மாறியது வரலாறு.
2010 வாக்கில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமாகி இருந்தாலும் லைம்லைட்டிற்குள் வந்தது என்னவோ 2013 இல் தான். அந்த ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான தவன் தனது முதல் போட்டியிலேயே அசத்தலாக விளையாடி சதம் விளாசி இருப்பார். அவரது சாதனைகள் சில…
#முதல் போட்டியிலேயே அதிகவேக டெஸ்ட் சதம் அடித்த வீரர்
2013 அக்டோபரில் சண்டிகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் தவன். முதல் போட்டி என்ற எந்தவித பதட்டமும் இல்லாமல் 85 பந்துகளில் 100 ரன்களை அடித்திருந்தார். இன்று வரை அதுவே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் வீரர் படைத்த சாதனையாக உள்ளது.
#ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியாவுக்காக ரன் மழை பொழிபவர் தவன்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் இந்தியாவுக்காக அதிக ரன்களை குவிக்கும் வீரர் என்றால் அது தவன் தான். 2015 உலக கோப்பையில் 412 ரன்கள், 2013 இல் 363 ரன்கள் மற்றும் 2017இல் 338 ரன்கள் என ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் அதிக ரன்களை இந்தியாவுக்காக எடுத்தவர் தவன் தான். அதுமட்டுமல்லாது அதிவேகமான ஐசிசி தொடர்களில் 1000 ரன்களை கடந்தவரும் தவன் தான்.
#மிக குறைவான இன்னிங்சில் அதிவிரைவாக 1000, 2000 மற்றும் 3000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் கடந்தவர் தவன். இதில் கோலியுடன் 1000 ரன் ரெக்கார்டை மட்டும் சமன் செய்துள்ளார்.
#நூறு ஒருநாள் போட்டிகளுக்கு பிறகு 4309 ரன்களை கடந்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் இரண்டாவது வீரராகவும் உள்ளார் தவன்.
#இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன்களை குவித்தவரும் தவன் தான். 2018 இல் மொத்தமாக 18 போட்டிகளில் விளையாடி 689 ரன்களை குவித்திருந்தார். இதில் ஆறு அரை சதங்களும் அடங்கும்.
#இதுவரை மொத்தமாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக 9711 ரன்களை குவித்துள்ளார் தவன். அதே போல டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாகவே சதம் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேனும் அவர் தான்.
அடுத்து வரும் நாட்களில் மேலும் பல சாதனைகளை படைக்க உள்ளார் அவர்.
ஹேப்பி பர்த் டே...