IND vs WI: வெற்றி நடையை தொடரும் இந்தியா - கடைசியாக விளையாடிய 9 டி20 போட்டிகளிலும் வெற்றி
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (20/02/2022) விளையாடிய டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 0 என வென்றுள்ளது இந்தியா. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரையும் இந்தியா 3 - 0 என கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய கைல் மேயர்ஸ் மற்றும் ஷாய் ஹோப் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இருவரும் தீபக் சாஹர் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் பவல் இணையர் 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹர்ஷல் படேல் அந்த பார்ட்னர்ஷிப்பை தகர்த்தார். பவல் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த பொல்லார்ட் மற்றும் ஜேசன் ஹோல்டரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் கைப்பற்றினார் வெங்கடேஷ் ஐயர்.
ரோஸ்டன் சேஸ் 12 ரன்களில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து ரொமாரியோ ஷெப்பர்ட் உடன் 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் பூரன். அவர் 61 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ரொமாரியோ ஷெப்பர்ட் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது. இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 9 போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா, நியூசிலாந்து (3), வெஸ்ட் இண்டீஸ் (3) வெற்றிகளை இந்தியா பதிவு செய்துள்ளது. அதோடு அடுத்தடுத்த இரண்டு டி20 தொடர்களிலும் எதிரணியை ‘ஒயிட் வாஷ்’ செய்து வென்றுள்ளது இந்தியா.
இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரன் 3 போட்டிகளில் விளையாடி 184 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 107 ரன்கள் எடுத்துள்ளார். இந்த போட்டியில் 31 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.