இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும் தனது தடம் மாறாமல் களத்தில் நின்று அரை சதம் கடந்துள்ளார் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்.
பண்ட் களத்திற்கு வரும் போது இந்திய அணி 118 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில் இருந்தது. ஆனால் அதற்கடுத்த சில பந்துகளில் ஆட்டம் முழுவதுமாக இங்கிலாந்து பக்கம் திரும்பியது. கேப்டன் கோலி மற்றும் ராகுல் என பார்மில் உள்ள இருவரும் அவுட். அது இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது.
இருந்த போதும் அசராமல் பாண்ட்யாவுடன் கூட்டு சேர்ந்து பண்ட் இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டு வருகிறார். பொறுப்புடன் தனது விக்கெட்டின் அவசியத்தை புரிந்து கொண்டு அதிரடி காட்டாமல் ரெஸ்பான்சிபிள் இன்னிங்ஸ் விளையாடி வருகிறார். 44 பந்துகளில் அரை சதம் விளாசினார். அது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது மூன்றாவது அரை சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 50 ஓவர் முடியும் வரை களத்திலேயே இருங்கள் பண்ட் என ரசிகர்கள் அவருக்கு தூது விடுகின்றனர்.