வெற்றியோ? தோல்வியோ? தனி நபரை நம்புகின்றதை நிறுத்துமா இந்திய கிரிக்கெட் அணி ?

வெற்றியோ? தோல்வியோ? தனி நபரை நம்புகின்றதை நிறுத்துமா இந்திய கிரிக்கெட் அணி ?
வெற்றியோ? தோல்வியோ? தனி நபரை நம்புகின்றதை நிறுத்துமா இந்திய கிரிக்கெட் அணி ?


கிரிக்கெட் உலகில் இப்போது இருக்கும் அணிகளில் மிகவும் வலுவானது எனக் கூறப்படுவது இந்தியக் கிரிக்கெட் அணி. ஒரு காலத்தில் இந்தியாவில் விளையாடும் போட்டிகளில் மட்டும் புலி போல் பாயும், வெளிநாடுகளில் பூனைப் போல பதுங்கும் என்ற விமர்சனம் இந்திய கிரிக்கெட் மீது வீழ்ந்திருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளிலும் இந்திய அணி தொடர்களையும், கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது. அதேபோலத்தான் இப்போது இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து வென்றது இந்தியா.

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்தியா நிச்சயம் கைப்பற்றும் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர். ஏனென்றால் இந்தியா பலமான அணி. ஆனால் இந்தியா ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இந்தத் தோல்வி இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இத்தொடரில் கோலி சரியாக பேட்டிங் செய்யாததும், பும்ரா முன்பு போல் பந்து வீசாததும்தான் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். எல்லாம் சரிதான் இந்தியா முன்பு பெற்ற வெற்றிகள் எல்லாம் அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியதால் கிடைத்ததே தவிரத் தனி மனிதச் சாதனையால் அல்ல.

இத்தொடரில் கோலி, பும்ராதான் சரியாக விளையாடவில்லை. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், பிருத்வி ஷா, சாஹல், சைனி, ஜடேஜா, மணீஷ் பாண்டே ஆகியோர் சிறப்பாகவே விளையாடினார்கள். ஆனாலும் தோல்வி, பழி அனைத்தும் கோலி, பும்ரா மீது விழுந்துள்ளது. அப்போது, மீண்டும் 25 ஆண்டுக்கு முன்னர் இருந்த வரலாறுக்கு திரும்புகிறதா இந்திய கிரிக்கெட் அணி ? இப்போதும் தனி ஒரு வீரரின் சதத்தையும், தனி ஒரு வீரரின் விக்கெட் வீழ்த்தலையும் நம்பித்தான் இருக்கிறதா ? என்ற கேள்விகள் பூதாகரமாகக் கிளம்பியுள்ளது.

இப்படிதான் 1970 முதல் 1980 வரை சுனில் கவாஸ்கரையும் கபில்தேவையும் நம்பியிருந்தது இந்திய அணி. அதன் பின்பு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் காலமாக இருந்தது 1990 முதல் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் வரை தனி வீரராக நாட்டின் வெற்றிக் கனவை அவர் தன் தோளில் சுமந்தார். சச்சின் டெண்டுல்கர் அவுட்டானால் தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிட்டு, அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவார்கள். ஏனென்றால் இந்தியா நிச்சயம் தோற்றுவிடும் என்று ரசிகர்களுக்குத் தெரியும். சச்சினின் சுமை ஓரளவுக்கு சவுரவ் கங்குலி கேப்டனான பின்பு குறைந்தது. அப்போதுதான் திராவிட், சேவாக், யுவராஜ் சிங் போன்றவர்கள் வெற்றி நாயகர்களாக உருவானார்கள்.

பின்பு, எம்.எஸ்.தோனி கேப்டனான பின்பு சச்சின் உள்ளிட்ட சீனியர் வீரர்களின் பாரம் முழுமையாகக் குறைந்தது. ரோகித் சர்மா, தவான், கோலி என ஜொலிக்க ஆரம்பித்தார்கள். பந்துவீச்சிலும் அப்படிதான் கபில் தேவ், கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகியோருக்கு இருந்த அழுத்தம் இப்போதுள்ள அணியில் இல்லை. ஏனென்றால் மிகச் சிறந்த பந்துவீச்சை கொண்ட அணியாகத்தான் இந்தியா இப்போது இருக்கிறது. இத்தொடரில் தொடக்க வீரர்களுக்கு காயம். அதற்குப் பதிலாக புதுமுகங்கள் பிருத்வி ஷா, மயாங்க் அகர்வால் களமிறக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களால் ஜொலிக்க முடியவில்லை. கோலி மொத்தம் 75 ரன்கள்தான் 3 போட்டிகளைச் சேர்த்து எடுத்துள்ளார்.

பந்துவீச்சில் சஹால் மட்டுமே ஜொலித்தார் அதனால் தான் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடினாலும் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் சஹால் 6 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பும்ரா புஸ்வானமாக போனால் என்ன, மற்ற பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியிருக்க வேண்டாமா ? அதனால்தான் கோலி மீதும் பும்ரா மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஒருதலைபட்சமாக பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவும் இதுகுறித்து யோசிக்க வேண்டும். ஆடும் லெவனில் சரியான இடத்தில் வீரர்களைக் களமிறக்க வேண்டும். பெரும் மாற்றங்கள் வேண்டாம், சிறிய மாற்றங்கள் செய்திருந்தாலே ஒருநாள் தொடரை வென்று இருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. அடுத்த தொடரிலாவது இதனைச் சரி செய்ய வேண்டும். மீண்டும் ஓரிரு வீரர்களை நம்பிதான் இந்தியாவின் வெற்றி இருக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com