இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தங்கராசு நடராஜனை சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததே டி20 லீக் தொடரான ஐபிஎல்தான். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சீசனில், சர்வதேச கிரிக்கெட்டில் தனி சாம்ராஜ்யம் செய்து வந்த தோனி, டிவில்லியர்ஸ் மாதிரியான அபார திறன் படைத்த பேட்ஸ்மேன்களை அவுட் செய்து அப்ளாஸ் அள்ளியவர். அதன் மூலம் சேலம் - சின்னப்பம்பட்டியிலிருந்து கிளம்பிய நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்து ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அவரது வெற்றியை தமிழகத்தின் பட்டி தொட்டி தொடங்கி மெட்ரோ சிட்டி வரை கிரிக்கெட் பேட்டும், பந்தும் கையுமாக சுற்றி கொண்டிருக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் தங்களது வெற்றியாகவே கருதி கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
2015இல் தமிழக அணியில் இடம் பிடித்த நடராஜானுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணிதான். 2017இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என அறியப்பட்ட அந்த அணி நடராஜனை 3.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஏலம் முடிந்த கையோடு பத்திரிகை மற்றும் ஊடங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார் நடராஜன்.
2017 சீசனில் மொத்தம் ஆறு போட்டிகள் விளையாடிய அவர் 76 பந்துகளை வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். அதற்கடுத்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அவர் ஏலத்தில் எடுக்கபட்டார். இருப்பினும் இரண்டு சீசன்கள் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்த அவருக்கு 2020 சீசனில்தான் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணி விளையாடிய 16 போட்டிகளில் நடராஜன் விளையாடினார். மொத்தம் 377 பந்துகளை வீசி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரது யார்க்கர் பரவலாக பேசப்பட்டது. சர்வதேச வீரர்களும் அந்த யார்க்கர் அஸ்திரத்தை எதிர்கொள்ள திணறினார்கள்.
2020 ஐபிஎல் சீசனில் அவரது திறனை உற்று கவனித்த இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு ஆஸ்திரேலிய தொடரில் அவரை சேர்த்தது. தொடர்ந்து இந்திய அணியின் ஆடும் லெவனிலும் அவர் இடம் பெற்றார். ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிய அவர் அந்த தொடரில் டெஸ்ட் போட்டியிலும் அறிமுக வீரராக களம் இறங்கினார்.
அண்மையில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது நடராஜன் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகவும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணியின் நம்பிக்கை மிக்க வீரராகவும் நடராஜன் உள்ளார்.
-எல்லுச்சாமி கார்த்திக்