தரமான டெஸ்ட் ஆட்டம்: டிராவிட் பிறந்தநாளுக்கு சிறப்புப் பரிசு வழங்கிய விஹாரி - அஸ்வின் ஜோடி
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையிலான சிட்னி டெஸ்டின் முடிவு டிராவாக இருந்தாலும் இதில் வெற்றிபெற்றது என்னவோ இந்தியாதான் என்று சொல்ல வேண்டும். 130 ஓவர்களுக்கு மேல் விளையாடியே வேண்டுமென்ற நிர்பந்தத்துடன் தான் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. ஜடேஜாவுக்கு இடது கை பெருவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவர் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடுவதே சந்தேகம் தான் என்ற நிலை. அதனால் இந்தியா இன்னிங்க்ஸை விளையாடுவதற்கு முன்பே ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.
ரோகித்தும், கில்லும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். தொடர்ந்து வந்த புஜாரா தன் பங்கிற்கு நிதானமாக விளையாடினார். ரஹானே 18 பந்துகளில் பெவிலியன் திரும்பினார். ரிஷப் பண்டும் - புஜாராவும் 148 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க அவ்வளவு தான் முடிந்தது இந்தியாவின் கதை என்ற பேச்சு எழுந்தது.
அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது என ஆஸ்திரேலியாவுக்கு அச்சத்தை கொடுத்தார் விஹாரி. அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அஷ்வின் கிளாஸாக ஆடினார். அவருக்கு எதிராக விளையாடிய விஹாரி காயம் (Harmstring Injury) கொடுத்த வலியையும் தாங்கிக்கொண்டு நன்றாக காஜ் ஆடினார். அது நான் தான் இந்திய அணியின் அடுத்த டிராவிட் என்பது போல இருந்தது. 161 பந்துகள் விளையாடிய அவர் 23 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இதில் 4 பவுண்டரிகளும் அடங்கும்.
உலகத்தரம் வாய்ந்த இன்னிங்க்ஸை அசராமல் ஆடினார் அவர். குட் லெந்த், ஷார்ட் பால், இன் கட்டர், அவுட் ஸ்விங், யார்க்கர் என ஆஸ்திரேலிய பவுலர்கள் தங்களது பவுலிங்கில் வேரியேஷனை காட்டிலும் விஹாரியை ஒண்ணுமே செய்ய முடியவில்லை. அவரது விக்கெட் நிச்சயமாக ஆஸ்திரேலியாவுக்கு பெரிய இம்சையாக இருந்தது. வழக்கமாக டாட் பால் ஆடவிட்டு பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுப்பது பவுலர்கள் பாணி. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக இன்று விஹாரி ஆஸ்திரேலிய பவுலர்களை அப்செட் செய்து விட்டார்.
இந்தியா 200 ரன்களை தாண்டுவதே கடினம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் பாண்டிங் சொல்லியிருந்தார். டிராவிட் இருந்தால் மட்டும் தான் இந்தியா இந்த போட்டியை டிரா செய்ய முடியும் எனவும் விமர்சகர்கள் சொல்லியிருந்தனர். புஜாராவும், ரஹானேவும் அதை செய்வார்கள் என எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அதை செய்தது விஹாரி.
இன்று இந்தியாவின் பெருஞ்சுவர் என சொல்லப்படும் ராகுல் டிராவிடுக்கு பிறந்த நாள். அவருக்கு பரிசாக இந்த வெற்றியை (டிரா) பரிசாக கொடுத்துள்ளார் விஹாரி. 27வயதான விஹாரி ஆந்திராவை சேர்ந்தவர். இந்தியாவுக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்களை அடித்துள்ளார்.