“எப்போதும் உனது மனம் சொல்வதை கேள்” - இளம் விராட்டிற்கு கேப்டனின் நெகிழ்ச்சியான கடிதம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது பிறந்தநாளையொட்டி உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய பயணம் மற்றும் வாழ்க்கை கற்றுதந்த பாடம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை கடிதமாக எழுதி பதிவிட்டுள்ளார். இந்த கடிதம் 15 வயது இளம் விராட்டிற்கு தற்போதுள்ள விராட் கோலி எழுதுவது போல் உள்ளது.
அதில், “முதலில் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வருங்காலம் குறித்து கேட்க உனக்கு பல கேள்விகள் இருக்கும். ஆனால் நான் தற்போது ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளேன். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கும் போது ஒவ்வொரு சவாலும் மிகவும் த்ரிலாக இருக்கும். அதேபோல ஒவ்வொரு சந்தர்பத்திலும் எதாவது ஒன்று கற்றுக் கொள்வோம். நமது இலக்கை அடைய நாம் செல்லும் பாதை தான் மிகவும் முக்கியம்.
நமது வாழ்வில் பல பெரிய விஷயங்கள் காத்திருக்கும். ஆகவே ஒவ்வொரு சிறிய வாய்ப்பிற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். உனக்கான வாய்ப்பு வரும் போது அதை நீ லாவகமாக பிடித்து கொள்ள வேண்டும். உன்னுடைய முயற்சியில் நீ தோல்வி அடைய நேரிடும். இது அனைவரும் சந்திக்கும் தோல்வியாக தான் இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறை நாம் தோல்வி அடைந்த பின்னரும், எவ்வாறு மீண்டும் எழுவோம் என்பது தான் முக்கியம். நீ ஒவ்வொரு தோல்விக்கு பிறகு கண்டிப்பாக மீள்வேன் என்று உறுதியாக இருக்க வேண்டும். முதல் முயற்சியில் நீ வெற்றி அடையவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்.
பலருக்கு உன்னை பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஆனால் அதனை பற்றியெல்லாம் கவலைப்படாதே. எப்போது உன் மீது நீ நம்பிக்கையை வைக்க வேண்டும். மேலும் நீ எப்போதும் உனது அப்பா வாங்கி தராத விஷயம் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்காமல் அவர் செய்த சில நல்ல விஷயங்களை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். உன்னுடைய அப்பா சில நேரங்களில் உன்னிடம் கடினமாக நடந்து கொள்வார்.
ஆனால் அது அனைத்தும் உன்னை சிறந்தவராக ஆக்க மட்டுமே. பல முறை நம்மை நமது குடும்பம் புரிந்து கொள்வதில்லை என்ற எண்ணம் நமக்கு வரும். ஆனால் ஒன்றை மனதில் வைத்து கொள். எப்போதும் நம் மீது அளவு கடந்த அன்பை நமது குடும்பத்தினர் மட்டுமே வைப்பார்கள்.
இறுதியாக எப்போதும் உனது மனம் சொல்வதை கேளுங்கள். உனது கனவுகளை துரத்து. அனைவரிடமும் அன்பாக இரு. அத்துடன் பெரிதாக கனவு கண்டால் எவ்வாறு ஜெயிக்க முடியும் என்பதை உலகத்திற்கு வெளிபடுத்து. குறிப்பாக நீ நீயாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.