“183 ரன்னில் ஆல் அவுட்” - பும்ரா, ஷமி வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து அணி

“183 ரன்னில் ஆல் அவுட்” - பும்ரா, ஷமி வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து அணி
“183 ரன்னில் ஆல் அவுட்” - பும்ரா, ஷமி வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து அணி

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பந்து வீசிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே கைமேல் பலனாக முதல் விக்கெட்டை வீழ்த்தி சிறப்பான தொடக்கத்தை அளித்தார் பும்ரா. பின்னர், இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 66 ரன்களுக்குள் 3 விக்கெட் சாய்ந்துவிட்டது.

கேப்டன் ஜோ ரூட் மட்டும் நிதானமாக விளையாட மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு அளித்த பேரிஸ்டோவ் 29 ரன்களில் நடையைக் கட்டினார். ரூட் - பேரிஸ்டோவ் இணை களத்தில் இருக்கும் வரை இங்கிலாந்து பக்கமே ஆட்டம் இருந்தது.

ஆனால், அதன்பிறகு ஆட்டத்தின் திசை முழுக்க முழுக்க இந்திய அணியின் பக்கம் வந்தது. லாரன்ஸ், ஜோஸ் பட்லர் டக் ஆகினர். சிறப்பாக விளையாடிய ரூட் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் இறுதியில் சாம் கர்ரன் அதிரடியாக விளையாடி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவருக்கு எந்த வீரரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இறுதியில் 183 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. சாம் கர்ரன் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதேபோல், ஷர்துல் 2, முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com