ஜடேஜா 4வது டெஸ்டில் விளையாடவில்லை - இந்திய அணிக்கு வேதனை கொடுக்கும் காயங்கள்!
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு காயம் பெருத்த வேதனையை கொடுத்து வருகிறது. கோலி சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். அதனால் ரஹானே அணியை வழிநடத்தி வருகிறார்.
அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மா தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே விலகினார். ஷமி முதல் போட்டியோடு விலகினார். உமேஷ் இரண்டாவது போட்டியில் பந்து வீசிக்கொண்டிருந்த போதே காயம்பட்டு பெவிலியன் திரும்பினார். கே.எல். ராகுல் பயிற்சியின் போது கை மூட்டில் ஏற்பட்ட காயத்தினால் தொடரில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இந்திய அணியின் அசத்தல் ஆல் ரவுண்டரும், பார்மில் உள்ள வீரருமான ரவீந்திர ஜடேஜா மூன்றாவது போட்டியில் பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலியர்கள் வீசிய பவுன்சர் தாக்கியதால் இடதுகை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜடேஜா நான்காவது டெஸ்டில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இதே போட்டியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டிற்கு முழங்கை பகுதியில் ஏற்பட்ட காயம் எந்தவித பாதிப்பையும் கொடுக்காததால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவிற்காக விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் காயம் அணிக்கும் வேதனையை கொடுத்து வருகிறது.