மறக்க முடியாத அந்தப் போட்டி..! - பிரியா விடை பெற்ற கைஃப்
இந்திய அணியின் மறக்க முடியாத பீல்டர் முகமது கைஃப். அவர் டைவ் அடித்து பிடிக்கும் கேட்ச் நம்மை அப்படி வியக்க வைக்கும். காற்றிலேயே மிதப்பது போல் தெரியும். குறுகிய காலமே இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், இன்று அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வை அறிவித்துள்ள இன்றைய நாள் கைஃப் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். கைஃப் தனது ஓய்வை அறிவித்த இந்த நாள் அவருக்கும் கங்குலி தலைமையிலான இந்திய அணிக்கும் மறக்க முடியாத ஒரு நாள். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 16 ஆண்டுகளுக்கு இந்திய அணி பழித் தீர்த்த நாள் இன்று.
கங்குலி தலைமையிலான இந்திய அணி 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாட்வெஸ்ட் தொடரில் விளையாடியது. இதேநாளில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இறுதிப் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்துவிட்டது. 326 ரன் இலக்கு என்பது இன்றைய தினத்தில் எளிதில் அடித்துவிடக்கூடிய இலக்காக தெரியலாம். ஆனால், 16 வருடங்களுக்கு முன்பு 300 ரன்கள் என்பதே இமாலய இலக்கு தான். சொல்லப்போனால், 275 ரன்களுக்கு மேல் அடித்தாலே அது கடின இலக்குதான்.
326 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவாக், கங்குலி நல்ல அடித்தளம் கொடுத்தார்கள். அதிரடியாக விளையாடிய கங்குலி 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சேவாக்கும் 45 ரன்னில் நடையைக் கட்டினார். கங்குலி, சேவாக் ஆட்டமிழந்த உடனே அடுத்த மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால், 146 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்ந்து இந்திய அணி தடுமாறியது. இதனால், இந்திய அணி வெற்றி பெறுமா என்ற அச்சம் இருந்தது.
இக்கட்டான அந்த நேரத்தில் யுவராஜ் சிங்கும், முகமது கைஃபும் இணைந்து இந்திய அணிக்கு வெற்றிக்கு இட்டுச் சென்றனர். இந்தப் போட்டியும் மிகவும் பரபரப்பாக சென்றது. 267 ரன்கள் எடுத்திருந்த போது யுவராஜ் 69 ரன்னில் ஆட்டமிழந்த போது, பரபரப்பு உச்சத்துக்கு சென்றது. அப்போது, கைஃப் தனி ஆளாக நின்று களத்தில் போராடினார். அவருக்கு ஹர்பஜன் (15) சற்று நேரம் ஒத்துழைப்பு அளித்தார். ஹர்பஜனும், கும்ளேவும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க முழு பொறுப்பும் கைஃப் கைக்கு சென்றது. கைஃப் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 49.3 ஓவரில் 3 பந்துகள் மட்டுமே மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்திய அணிக்கு மிக முக்கியமான அந்தப் போட்டியின் வெற்றிக்கு கைஃபின் பங்களிப்பு அளப்பரியது. கைஃப் கிரிக்கெட் வரலாற்றிலும் இந்தப் போட்டி அவருக்கு மிக முக்கியமானது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் கைஃப் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை கைஃப் வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய ஓய்வு அறிவிப்பு குறித்து கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் கிரிக்கெட் விளையாட தொடங்கும் போது, இந்திய அணியில் ஒரு நாள் விளையாடினால் போதும் என்று தான் கனவு கண்டேன். ஆனால், என்னுடைய வாழ்நாளில் 190 நாட்கள் நான் இந்திய அணிக்காக விளையாடிவிட்டேன். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற எனக்கு இதுவே உரிய நாளாக இருந்தது. ஆதரவு அளித்த எல்லோருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், சச்சின் டெண்டுல்கரும் கைஃப் ஓய்வு அறிவிப்பு குறித்த தனது நினைவுகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஓய்வை அறிவிக்க சரியான நாளை தேர்வு செய்தீர்கள் கைஃப். அந்த நினைவுகள் இன்னும் பசுமை மாறாமல் உள்ளது. லாட்ஸ் மைதானத்தில் பெற்ற வெற்றியைப் போல் இன்னும் பல வெற்றிகளை உங்கள் வாழ்வில் பெற வேண்டும். என்னுடைய வாழ்த்துகள் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார் சச்சின்.
இந்திய அணியில் 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் கைஃப் அறிமுகமானார். 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கைஃப் 2753 ரன் குவித்தார்.
யுவராஜ் சிங்கும், கைஃப்பும் பல போட்டிகளில் பார்ட்னர் ஷிப் போட்டு இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். பீல்டிங் இருவரும் கை தேர்ந்தவர்கள். அதேபோல் பேட்டிங்கின் போது பார்ட்னர்ஷிப்பின் போது ரன்னிங் ஓடி இருவரும் பலமுறை அசத்தியுள்ளனர்.