பாக். கிரிக்கெட் லீக்: வெறிச்சோடிய ஸ்டேடியம், விளாசும் ரசிகர்கள்!
இந்தியாவில் ஐபிஎல் திருவிழா போன்று பாகிஸ்தான் பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டியை கடந்த 2 வருடங்களாக நடத்தி வருகிறது. மூன்றாவது தொடர், துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கியது. தொடக்க விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. போட்டி தொடர்ந்து நடந்துகொண்டிருக்க, ஸ்டேடியம் மட்டும் வெறிச்சோடி கிடக்கிறது. ரசிகர்கள் கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை. குறைவான ரசிகர்களே வந்து பார்க்கின்றனர். போதாதா, நெட்டிசன்களுக்கு? இதை வைத்து ஏகப்பட்ட மீம்களையும் கலாய்த்தல்களையும் தொடங்கிவிட்டனர், இணையத்தில்.
ஒரு ரசிகர், கடல், பனிப் படர்ந்த அண்டார்டிகா, வெயில் கொளுத்தும் பாலைவனம் ஆகிய புகைப்படங்களுடன் பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டி நடக்கும் ஸ்டேடியத்தையும் இணைத்து, மனித தலைகள் இல்லாத இடங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு ரசிகர், ‘பாகிஸ்தான் பிரதமர் கடத்தப்படுகிறார். கடத்தல்காரன் 1: ம்... ஆளில்லாத இடத்துக்கு கொண்டு செல்வோம். கடத்தல்காரன் 2: ஸ்டேடியத்துக்கு போ, அங்க யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கலாய்த்துள்ளார்.
இன்னொருவர் ஐபிஎல் சீயர்ஸ்லீடர்சையும் பாகிஸ்தான் சியர்ஸ்லீடர்சையும் ஒப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.
இன்னொருவர், ஐபிஎல் மேன் ஆப் த மேட்ச் அவார்டாக தோனிக்கு ரூ.5 லட்சம் கொடுப்பதாகவும், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதுக்கு சாப்பாடு மட்டும் கொடுப்பதாகவும் கலாய்த்துள்ளார். இதே போல இன்னும் பலர் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.